நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே தமிழக உள்ளாட்சி தேர்தல்? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மேமாதம் இறுதியில்தான்  அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்கள் நலப்பணிகள் பாதிப்படைந்து உள்ளன. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உயர்நீதி மன்ற உத்தரவு படி உள்ளாட்சி வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவி வருவதாக தேர்தல் ஆணையம் உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உள்ளாட்சி வார்டு மறு வரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடைந்து விடும். அதன்பிறகு, இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்படும், அதையடுத்து, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு வருகிற மே மாதம் கடைசி வாரத்தில் பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில், மே கடைசியில்தான் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai high court, parliamentary election, Tamil Nadu Local body Election, Tamilnadu Election Commission, உயர்நீதி மன்றம், தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க ஜன. 31 வரை உயர்நீதிமன்றம் கெடு, தமிழக தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தல்
-=-