கோவா: மனோகர் பாரிக்கரை தொடர்ந்து 3 அமைச்சர்கள் உடல்நிலை தீவிர பாதிப்பு

பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை தொடர்ந்து 5 எம்எல்ஏ.க்கள் உடல் நலம் பாதித்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், என்ன வகையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

கோவா முதல்வர் மனேகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். நியூயார்க் நகர மருத்துவமனையில் சுமார் 3 மாதங்கள் சிகிச்சை பெற்ற அவர் கடந்த மாதம் மத்தியில் கோவா திரும்பினார்.

இந்நிலையில், கோவா மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் சுதின் தவாலிகருக்கு மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இவர் தற்போது குணமடைந்து வருகிறார். போக்குவரத்து துறையையும் இவர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இவரை தொடர்ந்து மற்றொரு பாஜக அமைச்சர் பாண்டுரங் மத்கைகர் மூளை பக்க வாதம் காரணமாக கடந்த மாதம் முதல் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் பிரான்சிஸ் டி சவுசா கிட்னி பாதிப்பு காரணமாக வெளிநாட்டில் சில வாரம் தங்கியிருந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும், 2 எம்எல்ஏ.க்கள் நோய் தாக்குதல் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். உடல் பாதித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜக.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்து.

இது போல் கோவாவில் அடுத்தடுத்து அமைச்சர்களும், எம்எல்ஏ.க்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு அரசு பணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் அவர்களின் உடல் நிலை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.