பிரியங்கா தாக்குதல் : புகைப்படம் வைரலாகிய பிறகு உத்தரப்பிரதேச காவல்துறை மன்னிப்பு

--

க்னோ

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி சட்டை இழுக்கப்பட்டுத் தாக்கப்பட்டதற்கு அந்த புகைப்படம் வைரலாகிய பிறகு உத்தரப்பிரதேச  காவல்துறை ஆணையர் மன்னிப்பு கோரி உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஓர் 19 வயதுப் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார்.  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.   அவருடைய உறவினர்களால் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யவும் அனுமதி அளிக்காமல் அரசு தரப்பில் தகனம் செய்யப்பட்டது.  இது நாட்டில் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

இதையொட்டி மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் செயலர் பிரியங்கா காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.   ராகுல் காந்தியை ஒரு காவலர் பிடித்து கீழே தள்ளி உள்ளார். பிரியங்கா காந்தியின் சட்டையைப் பிடித்து ஒரு ஆண் காவலர் இழுத்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் எவ்வித ஒரு உணர்ச்சியும் காட்டாமல் இருந்துள்ளனர்.  இந்நிலையில் பிரியங்கா காந்தியின் சட்டையை ஒரு ஆண் காவலர் பிடித்து இழுக்கும் புகைப்படம் வலைத் தளங்களில் பலராலும் பதியப்பட்டு வைரலாகியது.

தற்போது நொய்டா காவல்துறை ஆணையர் தனது டிவிட்டரில், “நொய்டா காவல்துறை பிரியங்கா காந்தியிடம் கூட்டத்தினர் தவறாக நடந்து கொண்டதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.  இதையொட்டி காவல்துறைத் தலைவர் தாமாக முன் வந்து ஒரு மூத்த பெண் அதிகாரியை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்..  நாங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் மரியாதையை காக்கவும் கடமைப் பட்டுள்ளோம்” எனப் பதிந்துள்ளார்.