டில்லி

புல்வானா தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக அனைத்து வீரர்களின் வான் வழி பயணங்களுக்குன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 14 ஆம் தேதி 2500 சிஆர்பிஎஃப் வீரர்கள் 70 வாகனங்களில் ஜம்முவில் இருந்து காஷ்மீர் சென்றுக் கொண்டிருந்தனர்.   அப்போது ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் மரணம் அடைந்தனர்.   ஏராளமானோர் படு காயம் அடைந்தனர்.

அப்போது சிஆர்பிஎஃப் வீரர்களை வான்வழியே அழைத்துச் செல்ல அனுமதி கேட்டதாகவும் அரசு அனுமதி அளிக்காததால் இந்த தரை வழி பயணம் மேற்கொண்டதாகவும் சிஆர்பிஎஃப் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.   இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் காஷ்மீர் பகுதியில் உள்ள அனைத்து வீரர்களின் வான் வழிப்பயணத்துக்கும் அனுமதி அளித்துள்ளது.   இந்த அனுமதி வீரர்கள் பணி நிமித்தமாகவோ அல்லது விடுமுறையின் போதோ செய்யும் அனைத்து பயணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி டில்லி – ஸ்ரீநகர், ஸ்ரீநகர் – டில்லி, ஜம்மு-ஸ்ரீநகர், மற்றும் ஸ்ரீநகர் – ஜம்மு செல்லும் அனைத்து வீரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் அவர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலமும் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் காவலர், தலைமை காவலர், துணை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7,80,000 பணியாளர்கள் பலனடைவார்கள் என கூறப்படுகிறது.