காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் யார்? அதிர் ரஞ்சன் சவுத்திரிக்கு வாய்ப்பு…..!

டில்லி:

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்திரி நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது.

17வது மக்களவை தேர்தல் முடிந்து, வெற்றி பெற்ற உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றுள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிய்ன நாடாளுமன்ற குழு தலைவர் நியமிப்பது குறித்து, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை டில்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் அந்த ஆலோசனை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  ஏ.கே. ஆண்டனி, ஜெயராம் ரமேஷ், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதில்,  மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்திரி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தமுறை நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக மூத்த காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே இருந்த நிலையில், அவர் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், ராகுல் காந்தியை மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், அவர் பொறுப்புகளை ஏற்க மறுத்துவிட்ட நிலையில்,  காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருமான அதிர் ரஞ்சன் சவுத்திரியை (Adhir Ranjan Chowdhury ) நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.