டில்லி

கார்ப்பரேட் வரிக் குறைப்பை வரவேற்ற போதிலும் அதனால் முதலீடுகள் அதிகரிக்குமா என்பது சந்தேகமானது எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று மத்திய நிதி அமைச்சர் முதலீடுகளை அதிகரிக்க கார்ப்பரேட் வரி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளார்.   இதன் மூலம் மொத்தமாக 27.1% கார்பரேட் வரி செலுத்துவது போதுமானதாக ஆக்கப்பட்டுள்ளது.  அத்துடன் புதிய நிறுவனங்கள் கார்ப்பரேட் வரி விகிதம்  17.01% ஆக்கப்பட்டுள்ளது.   அத்துடன் பங்குகள் மீண்டும் பெறுவதற்கான வரியையும் நிதி அமைச்சர் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டிவிட்டரில், “பீதியில் ஆழ்ந்துள்ள மோடி அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று கார்ப்பரேட் வரி விகிதத்தைக் குறைத்து உள்ளது.   இது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனால் முதலீடுகள் அதிகரிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.   இதன் மூலம் இந்தியாவில் முதலீடு செய்பவர்களின் அச்சம் குறையுமா என்பதும் நிச்சயமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த  பதிவில் ஜெயராம் ரமேஷ், “நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் நடைபெற உள்ள நிகழ்வுக்காக வெளியிடப்பட்டுள்ளது.   அங்குச் செல்லும் பிரதமர் மோடி நான்  டேக்ஸ் (வரி விகிதம்) குறைவு அறிவிப்புக்குப் பிறகு டெக்ஸாஸ் வந்துள்ளேன் என இனி அறிவிக்கலாம்.   இது அவருடைய துருப்புச் சீட்டா?” எனப் பதிந்துள்ளார்.