குஜராத்தில் பாஜக.வுக்கு எதிராக பிரச்சாரம்….ராஜினாமா எம்பி அறிவிப்பு

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நானா படோல். பாஜக லோக்சபா எம்பி.யாக இருந்த இவர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியதோடு, எம்.பி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘ பாஜக அரசின் கொள்கைகளால் மக்கள் செத்து மடிகின்றனர். எனது குரலும் அங்கே அடக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் சட்டமன்ற தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். அங்கு பிற்படுத்தப்பட்ட மக்களை பாஜக எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதை ம க்களிடம் எடுத்து கூற முடிவு செய்துள்ளேன்.

விவசாயிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு லோக்சபாவில் குரல் கொடுத்துள்ளேன். இதேபோல் பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோதும், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தபோது வலியுறுத்தியுள்ளேன். பிரதமர் வீட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் இந்த பிரச்னைகள் குறித்து பேசினே. இதற்கு மோடி எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு மோடி எப்படி மதிப்பு கொடுக்கிறார் என்பதை அப்போது தான் பார்க்க முடிந்தது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘பாஜக தலைவர்ளுக்கு இடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளது. மேலும், பலர் ராஜினாமா செய்வார்கள். பணமதிப்பிழப்பால் கோடி கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழ ந்துள்ளனர். தனியார் வங்கிகள் பல ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன் நடந்த கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்து பேசியபோது பிரதமர் மோடியால் ஏமாற்றமடைந்தேன்’’ என்றார்.

மேலும், படோல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளருமான மோன் பிரகாஷை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பிரகாஷ் கூறுகையில், ‘‘படோலுக்கு எங்கள் கட்சி தாய் வீடு. அவர் முன்பு எங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் எழுப்பும் புகார்களை அவரும் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

முன்னதாக படோல் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் ஆகியோரை சந்தித்தார்.