கொல்கத்தா: ஊரடங்கு நிலவரத்தை அறிய மேற்கு வங்கம் வந்திருந்த மத்திய குழுவுக்கு மமதா பானர்ஜி தலைமையிலான அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் நிலவரத்தை நேரில் ஆய்வு செய்யவும், மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் அறிக்கை அளிக்கவும் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்து இருக்கிறது. மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது.

அதில் 3 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆகும். இந் நிலையில் மத்திய அரசின் குழுவானது ஊரடங்கு நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்கம் சென்றது.

இந்த குழுவினர் கொல்கத்தாவில் சுற்றுப்பயணம் செய்வது என்பது முதல்கட்ட திட்டமாகும். ஆனால், மத்தியக் குழுவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

கொல்கத்தா மற்றும் ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் இக்குழுக்கள் ஆய்வுக்காகவும், அனுமதிக்காகவும் காத்திருந்தன. ஆனால், மாநில அரசின் தரப்பில் இருந்து எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை.

இது குறித்து, உள்துறை அமைச்சக அதிகாரி புன்யாசலிலா ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் பேசியதாவது: மேற்கு வங்க அரசிடம் இருந்து எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. எங்கள் வேலையைச் செய்ய எங்களுக்கு அனுமதி இல்லை.

நாங்கள் மீண்டும் மேற்கு வங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். அனுமதி இல்லையெனில் நடவடிக்கை தொடங்கப்படலாம். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கிறது என்றார்.

நாங்கள் இன்று இடங்களை பார்வையிடலாம் என்று எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சில சிக்கல்கள் இருப்பதாக பின்னர் எங்களுக்கு  தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஆய்வை நடத்தாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கொல்கத்தா அணியின் தலைமை பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி அபூர்வா சந்திரா கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: குழுக்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றுள்ளன.  அங்கு அவர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கிறது. மேற்கு வங்கத்தை போலவே அவர்களுக்கும் முன்னதாகவே அறிவிப்பு வழங்கப்பட்டது என்றார்.