பஸ்வான் மறைவை அடுத்து மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஒரே பிரதிநிதி அத்வாலே

புதுடெல்லி:
ஸ்வான் மறைவை அடுத்து கூட்டணி கட்சிகளில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதனால் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் காலியாகி உள்ளது. அவர் வகித்து வந்த நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பஸ்வான் மரணம் அடைந்ததையடுத்து, மோடி தலைமையிலான அமைச்சரவையில், பாஜக அல்லாத கட்சியாக இந்திய குடியரசு கட்சி மட்டுமே இடம்பெற்றுள்ளது. அக்கட்சியின் ராம்தாஸ் அத்வாலே மத்திய மந்திரியாக உள்ளார். அதாவலே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியாக உள்ளார்.

மோடி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது, அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் (சிவசேனா), ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலிதளம்), ராம் விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன்பின்னர் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளமும் வெளியறியது. ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அரசில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.