சென்னை :

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து இரவு பகலாக பணியாற்றி வரும் காவலர்களின் பாதுகாப்புக்காக, காவல்துறையைச் சேர்ந்த வர்களே மாஸ்க் (முகக்கவசம்) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையர் உத்தரவுபடி, ஏற்கனவே காவலர்களைக்கொண்டே சானிடைசர் தயாரித்த நிலையில், தற்போது, டெய்லரிங் தெரிந்த ஆண், பெண் காவலர்களைக்கொண்டு மாஸ்க் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  வைரஸ்  பரவல் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  இதற்கு தேவையான சானிடைசர், முகக்கவசம் போன்றவைக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் சில இடங்களில்தான் இவற்றை பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

காவல்துறையினர் தேவைக்கேற்ப முகக்கவசம் கிடைக்காத சூழலில், காவலர்களைக்கொண்டே தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தின் மேல்தளத்தில் முகக்கவசம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை நகரில் பணிபுரியும் ஆயுதப்படை மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றும் தையல் தெரிந்த பெண் போலீசார் உள்ளிட்ட 30 பேர் முககக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலருக்கு    தையற்கலை வல்லுநர்களை வரவழைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதற்கு தேவையான தையல் மெஷின்கள் காவல்துறையினர் வீடுகளில் இருந்து எடுத்து வரப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு தேவையான மூலப்பொருளான தரமான காட்டன் துணி உள்பட மூலப்பொருட்கங்ள திருப்பூரில் ரூ.1 லட்சம் செலவில் வாங்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது மாஸ்க் தயாரிக்கும் பணி மும்மும்ரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்கப்படும் என தெரிகிறது. மொத்தம் 50 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.