Random image

சோபியாவை தொடர்ந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க தமிழிசை வற்புறுத்தல்

தூத்துக்குடி:

தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட இளம்பெண் சோபியா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், விமானத்தில் கோஷமிட்ட விவகாரத்தில் சோபியா மீது நடவடிக்கை எடுக்காத இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனததை  தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடுமையாக சாடி உள்ளார்.

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கண்ட, அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷ மிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து விமானம் தரையிறங்கியதும், அவருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்து விட்டார். இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சோபியாவுக்கு ஜாமீன் கேட்டு தூத்துக்குடி மாவட்ட மன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. சோபியாவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விமானத்தில் கோஷமிட்ட சோபியா மீது நடவடிக்கை எடுக்காத இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் இன்டிகோ விமான நிறுவனம் சரியாக முறையில் நடந்துகொள்ளவில்லை என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டி உள்ளார்.

You may have missed