நாளை சென்னை வரும் ரஜினிகாந்தை சந்தித்த பிறகே கட்சி தேதி பற்றிய அறிவிப்பு: தமிழருவி மணியன்

சென்னை: நாளை சென்னை வரும் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பிறகு கட்சி தேதி அறிவிப்பு குறித்து தெளிவான விவரம் கிடைக்கும் என்று தமிழருவி மணியன் கூறி உள்ளார்.

வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க போவதாகவும், அதற்கான தேதியை வரும் 31ம் தேதி அறிவிப்பேன் என்றும் அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தாம் தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினிகாந்த் அறிவித்தார்.

அதன்பிறகு, ஐதரபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா இருந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், ஒரு வாரம் அவருக்கு ஓய்வு தேவை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி வரும் 31ம் தேதி கட்சி அறிவிப்பை அவர் வெளியிடுவாரா என்பதில் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இந் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது கட்சியின் மேற்பார்வையாளரான தமிழருவி மணியன், ரஜினிகாந்த் நாளை சென்னை வருகிறார் என்று கூறி உள்ளார். தொடர்ந்து அவர் தெரிவித்து உள்ளதாவது:

ரஜினிகாந்த் நாளை சென்னை வருகிறார். அவர் வந்தவுடன் கட்சி தேதி அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்படும். அதன்பிறகு தான் டிசம்பர் 31ம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா என்பதில் தெளிவு கிடைக்கும். திட்டமிட்டபடி வரும் 31ம் தேதி கட்சி அறிவிப்பு இருக்கும் என்று நம்புகிறேன். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் தான் முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறி உள்ளார்.