தேர்தல் முடிவுக்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு: கேசிஆர் சந்திப்புக்கு பிறகு ஸ்டாலின் தகவல்

சென்னை:

தேர்தல் முடிவுக்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தெரிவித்தார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள  திமுக தலைவர் ஸ்டாலினை, ராஷ்டிரிய சமிதிகட்சித்தலைவரும், தெலங்கானா முதல்வருமான  சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது,  திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் 6 கட்ட  வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், 7வது கட்ட வாக்குப் பதிவு வரும் 19ந்தேதிநடைபெற உள்ளது. இந்த நிலையில் மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர் பாக பல்வேறு யூகங்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பாஜக, காங்கிரசுக்கு மாறாக 3வது அணி அமைக்கப்போவதாகவும், அந்த அணியை சேர்ந்த  ஒருவரே ஆட்சி அமைப்பபார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக சந்திரசேகர ராவ் பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வரும் நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், ராகுல் காந்தியை முதன்முதலாக பிரதமர் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்த ஸ்டாலினுடனான சந்திப்பு என்பதால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஊடகங்களும் உற்றுநோக்கி வருகின்றன.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதே, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக இடம்பெற்றுள்ளது என்பதை தெளிவுபடுத்திய ஸ்டாலின், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.