உ.பி-விவசாயிகள் கடன்தள்ளுபடி- அதிருப்தியில்   வங்கி அதிகாரிகள்!

--

லக்னோ,

உத்தரபிரதேச முதலமைச்சரின் விவசாயிகள் கடன்தள்ளுபடி உத்தரவு விவசாயிகள் கடன் பெறுவதில் சுணக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை அம்மாநிலத்திலிருக்கும் 2.15 லட்சம் விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் 30 ஆயிரத்து 729 கோடி ரூபாயை தள்ளுபடி செய்யவும், விவசாயிகள் திருப்பிச் செலுத்தாத 5630 கோடி ரூபாயை ரத்துச் செய்யவும் ஒப்புதல் அளித்தது. இது  பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளின்  உயர் அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பால் வங்கிக் கடன் பெற்றவர்கள் கடனை செலுத்த தயக்கம் காட்டுவதாகவும், இதனால்   பொதுத் துறை வங்கிகள்  விவசாயிகளிடமிருந்து  கடனைத் திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக  அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விவசாயிகளின் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை அரசுகள் ஊக்குவிக்ககூடாது. அப்படி ஊக்குவித்தால் கடனை திரும்ப பெறுவது இயலாத காரியமாகிவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  இதனால்   மற்ற மாநிலங்களில் உள்ள அரசு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற முடியாத சூழல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.