தடுப்பூசி போட ஆரம்பித்த பிறகு 40 முதல் 70 வயது உள்ளவர்களுக்கு பாதிப்பு குறைந்து வருகிறது

 

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் தீயாய் பரவி வருகிறது, பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா குறித்த தரவுகளை ஆய்வு செய்யும் ஆர்வலரான விஜய் ஆனந்த் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருக்கும் தகவல், தடுப்பூசி மீது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

1) 60-69 வயது உள்ளவர்களுக்கு பாதிப்பு 14.39% ல் இருந்து 11.05% ஆக குறைந்துள்ளது
2) 50-59 வயதுள்ளவர்களுக்கு 18.50% ல் இருந்து 16.71% ஆக குறைந்துள்ளது
3) 40-49 வயதுள்ளவர்களுக்கு 18.76% ல் இருந்து 18.4% ஆக குறைந்துள்ளது
4) 70-79 வயது 6.9% ல் இருந்து 5.2% ஆக குறைந்துள்ளது
5) 30-39 வயதுக்குட்பட்டவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர் இவர்களுக்கு 16.8% லிருந்து 21.22% ஆக அதிகரித்துள்ளது
6) 20-29 வயது 16 % லிருந்து 18% ஆக அதிகரித்துள்ளது
7) 0-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1.16% லிருந்து 1.8% ஆக அதிகரித்துள்ளது

40 முதல் 80 வயது வரை தடுப்பூசி போடும் வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பித்த பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது.

தடுப்பூசி போடும் வயதை எட்டாத இளவயதினருக்கு பாதிப்பு அதிகரித்து வருவது அனைவருக்குமான தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது