மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: ‘நியோகி’

 

மிழகத்தில், இதுவரை காணாத ஓர் அரசியல் குழப்பம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஐம்பதாண்டுக் காலமாக தமிழக மண்ணில் வலுவாக இருந்து வரும் அதிமுக – திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் தற்போது தங்கள் தலைமைகளை இழந்து ஆட்டம் கண்டிருக்கின்றன.

அதிலிருந்து மீண்டெழப் போவது யார் என்பதை பல விதமான எதிர் பார்ப்புகளோடு, தமிழர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்…

இந்த அரசியல் குழப்பத்தை, “அரசியல் வெற்றிடம்” என்று அறிவித்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ள தேசியக் கட்சியான பாஜக முயல்கிறது ! அப்படி முயல்வது தவறில்லை, அது அவர்களது உரிமையும் கூட ! ஆனால், அதற்கான அவர்களது வழிமுறைகள்தான் இப்போது நமது விமர்சனத்துக்கு உள்ளாகி நிற்கிறது !

ஒரு தேசியக் கட்சி, பெருமைக்குரியதொரு மாநிலத்தில் தனது கட்சி ஆட்சி பீடத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை. மேலும், கடந்த 50 ஆண்டுகாலமாக மாநிலக் கட்சிகள் மட்டுமே வேரோடி இருக்கும் ஓர் மாநிலத்தில், ஒரு வாய்ப்பு கண் சிமிட்டும் போது தேசியக் கட்சியான பாஜகவின் உள்மனம் உசுப்பிக் கொள்வதில் தவறொன்றும் இல்லை.

மோடி என்னும் வலுவான தலைமையின் கீழ், இந்தியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பரவிப் பிடித்துக் கொண்டே வரும் ஒரு தேசியக் கட்சிக்கு, தமிழ்நாட்டிலும் ஒரு வாகான சூழல் ஏற்படுகிறது என்றால் அதை பயன்படுத்திக் கொள்ளத்தான் முயலும் ! மீண்டும் சொல்கிறோம், அதில் தவறொன்றுமில்லைதான் ! ஆனால், அதற்கான வாய்ப்புக் கனியும் வரை காத்திருக்கப் பொறுமையும், கூடவே நேரான வழிமுறையும் வேண்டும் !

ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு மக்களின் மனதில் இடம் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் !?

முதலில், கொஞ்சம் கொஞ்சமாக மக்களோடு இரண்டறக் கலந்து பழக வேண்டும் ! தங்கள் கொள்கைகளை அவர்களது அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைக்க வேண்டும் !

தேவைப்பட்டால் அவர்களின் மனக் குறிப்பறிந்து தங்கள் கொள்கைகளில் சிலவற்றை விட்டுத் தரக் கூட முன்வர வேண்டும் ! சுயநலமின்றி மக்களுக்காக பற்பல போராட்டங்களை செய்து அதன் நற்பலன்களை மக்களுக்குக் கொடுத்து, அவர்களை நிம்மதியாக அனுபவிக்கச் செய்ய வேண்டும் ! சமூகத்தின் பல மட்டங்களிலும் ஊடுறுவி பலதரப்பட்டவர்களின் நன் மதிப்பையும் பெறவேண்டும் !

அவ்வாறு, தங்களை பல மட்டத்திலும் நன்றாக வலுவுடன் வளர்த்துக் கொண்ட பிறகுதான் ஒரு கட்சி அரசியல் ஆட்டத்தில் இறங்க வேண்டும் ! இப்படியான படிநிலை அணுகுமுறைதான் பலன் தருமே அன்றி, தடாலடியாக இறங்கி, எடுத்தெறிந்து செல்லப் பார்ப்பது என்பது மக்களிடம் வெறுப்பைத் தான் சம்பாதித்து தரும் !

“வாக்காள சமூகமே கேள்… தமிழக அரசியலில் ஓர் தேக்கம் இருக்கிறது. மக்களின் நல்வாழ்வுக்காக எங்களைத் தலையிடச் சொல்லி நீங்கள் ஒன்றிணைந்து பல வகைகளில் மன்றாடுகிறீர்கள் ! ஆகவே, நாங்கள் இப்போது இறங்குகிறோம்…” என்ற தோற்றத்தைக் காட்டி நம்ப வைத்திருந்தால், தமிழக மக்களுக்கு பாஜக மேல் மரியாதை கூடியிருக்கும் !

இந்த ஜனநாயக – சாத்வீக வழிமுறையில் தான் அன்றைய திமுகவை அரசியல் களமிறக்கினார் அண்ணா என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் !

ஆனால், இன்றைய தமிழக பாஜக என்ன மாதிரியான தோற்றத்தை மக்களுக்குக் காட்டுகிறது…?

“தமிழர்களே கேட்டுக் கொள்ளுங்கள்… மத்தியில் அசுர பலத்தோடு நாங்கள் தான் இருக்கிறோம் ! கவர்னரோ எங்கள் கையாள்…! சி.பி.,ஐ கூட எங்கள் பிடியில்…! எலக்க்ஷன் கமிஷனிலும் நாங்களே…! நீதிமன்றங்களும் – சிறையும் எங்கள் கண்ணசைவில் ! நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தி ருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை… எங்களுக்குத் தோன்றும் வகையில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் வளைப்போம், பிடிப்போம்..! யார் எங்களைக் கேட்பது…? என்பது போலவே இருக்கிறது அவர்களது அவசர அதிகார ஆட்டங்கள் !

அந்த அவசர ஆட்டத்தின் வாயிலாக அவர்கள் அதிமுக ஆட்சியைக் கலைக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அடுத்து என்ன நடக்க வேண்டும்…? நம்பத் தகுந்த படைகளோடு இவர்கள் அந்த இடத்துக்கு வர வேண்டும் ! அப்போதுதான் காரியத்துக்கான காரணம் மக்களிடம் சொல்லப்பட்டு, ஓரளவாவது ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும் !

எண்ணிப் பாருங்கள்…! ஆட்சிக்கு வரக் கூடிய நிலையிலா அவர்கள் இங்கே இருக்கிறார்கள்…? முதலில், அவர்களுக்குள் ஓர் ஒத்த கருத்து உள்ளதா..? உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்த்துக் கொண்டிருக்கும் குழுச் சண்டைகள் தீர்ந்து விட்டதா..? 234 தொகுதிக்கும் நிற்க வைக்க அவர்களிடம் முதலில் கேண்டிடேட் உள்ளார்களா…? பூத் ஏஜெண்ட்டாக அமர வைக்க அவர்களுக்கு பள்ளிப் பிள்ளைகளாவது கிடைப்பார்களா..? முகநூலைத் தாண்டி இவர்களது இயக்கம் இருக்கிறதா…?

இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல்… இன்னமும் நாலரை ஆண்டுக்கால ஆட்சி இருக்க அதை கலைத்துவிட்டு இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்…? பத்திரிக்கையாளர்களையே பொறுமையோடு கையாளத் தெரியவில்லை என்றால், தமிழக பாஜகவால் வேறு என்னதான் சாதித்து விட முடியும்…? தமிழக பாஜகவில் நான்கு பேரைத்தான் மக்களுக்கு தெரியும். அந்த நான்கு பேர்களுக்குமே தனித்தனி கோஷ்டிகள் உண்டு, தனித்தனிக் கருத்துக்கள் உண்டு என்றால் மக்கள் எந்த நம்பிக்கையில் எடுத்துப் போடுவார்கள் ஓட்டை !?

இப்படியானதொரு நிலையில் தமிழக பாஜக இருக்க, தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்னும் நாலரை ஆண்டுக் காலம் ஆயுள் உள்ள ஓர் ஆட்சியை கலைத்து என்ன பயன்…?

இன்னமும் பல்லே வளராத தன் குட்டிகளுக்கு இரையாக, வளர்ந்த காட்டானை ஒன்றை அடித்துப் போட நினைக்கிறது தாய்ப் புலி !

“எனக்கு வலிமை இருக்கிறது ; என்னால் முடியும், அடித்துப் போடுகிறேன்…” என்னும் தாய்ப் புலியின் இந்த செயல், அதன் “வேட்டை வலிமை” யை வேண்டுமானால் பறை சாற்றலாம் ! மற்றபடி, அது “வேட்டை தர்மத்தை” மீறிய ஆணவச் செயலாகவே கருதப்படும் ! கொள்ளப்படும் !

“தன்னாலும் இயலாது, அடுத்தவனும் இருக்கக் கூடாது…” என்பது என்ன வகையான மன நிலை ? குறிக்கோளே இல்லாமல் கோட்டையை இடிப்பதால் யாருக்கு என்ன லாபம் ? கத்தி இருக்கிறது என்பதால் கண்ணுக்கு படும் கன்றுகளையெல்லாம் வெட்டிக் கொண்டே போவது சரிதானா…? ஒரு வருடம் முடிவதற்குள் இன்னொரு பொதுத் தேர்தலா…? ஆறே மாதத்தில் – ஏழு கோடி மக்களுக்கும் புது அரசியல் தெளிவு பிறந்து விட்டதாக சொல்லப் போகிறார்களா…? பத்து நாள் பட்டினிக்காரனிடம் பகோடா பொட்டலம் சிக்கியது போல, இப்படி பிய்த்து எறிந்து பாழாக்குவது ஏன்..? இந்த அடாத செயலால் மக்கள் தான் பந்தாடப்படுவார்கள் என்பதை கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தார்களா…?

தமிழகம் என்பது என்னமோ, வாழத் தெரியாத – ஆளத் தெரியாத மக்களைக் கொண்ட ஒரு இரண்டும் கெட்டான் மாநிலம் என்பது போலவும், தாங்கள் தான் அதற்கு வாழ்வளிக்க வந்த “மெசையா” போலவுமானதொரு மனப் பான்மையோடு  பாஜகவின் தமிழக கிளை செயல்படுவது ஆச்சரியமாகவும் – அதிர்ச்சியாகவும் இருக்கிறது ! மக்களிடம் இது எதிர்மறை எண்ணத்தைத்தான் தோற்றுவிக்கும். பாஜக என்னும் தேசியக் கட்சிக்கு இது பெருமை சேர்க்காது !

அதிமுக என்னும் கட்சியில் அவர்களுக்குள் ஒரு அதிருப்தியும் – ப்ரச்சினையும் இருக்கிறது. அதை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் ! நாட்டில் பதிவு பெற்ற அரசியல்கட்சிகளான 1866  கட்சிகளிலும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. ஏன்…? தமிழகத்தில் இன்னும் காலூன்றவே செய்யாத பாஜகவிலும் கூட இருக்கிறது ! வீட்டுக்கு வீடு வாசல் – பூசல் !

அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினையை மாநிலக் கட்சிகள் எப்படி அணுகுகின்றன….?

பெரும்பான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சியாக இருந்து கொண்டு, தங்களுக்கு ஒரு வாய்ப்பு வராதா எனக் காலங்காலமாக காத்திருக்கும் பாமக இதில் நாகரீகமாக ஒதுங்கி இருக்கிறது !

50 ஆண்டுகால பொதுவாழ்வைக் கடந்த மதிமுக வின் தலைவர் வைகோ, “இது அவர்கள் உட்கட்சிப் பிரச்சினை, அது குறித்து தமக்கேதும் கருத்தில்லை…”  என அரசியல் முதிர்ச்சியோடு சொன்னார் !

“இன்று அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் ப்ரச்சினையை விரைவில் சரி செய்து கொள்வது அவர்களுக்கு – தமிழகத்துக்கு நல்லது“ என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எடுத்து சொன்னார்.

இதெல்லாம்தான், விளைந்த அரசியலுக்கு அழகு.

அதை விட்டு விட்டு, ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையில் மற்றொரு கட்சி வெளிப்படையாக தலையிடுவது என்பது ஆபாசம் ஆகும் !

எந்த ஒரு மாநிலத்திலும், மக்களிடம் ஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்தி நிலவத்தான் செய்யும். “ஆகா, பாலாறும் – தேனாறும் ஓடுகிறது ! இந்திர லோகமே இறங்கி வந்து விட்டது…ரொம்ப நன்றி ஆண்டைகளே…“ என்று வாக்களித்த மக்கள் குதூகலிக்கும் நிலை இந்தியாவில் எங்குமே இல்லை ! இது பாஜக ஆளும் மாநிலத்துக்கும் பொருந்தும்.

இந்தியா முழுவதும் மக்களிடம் அதிருப்தி இருப்பதில் ஆச்சரியம்  ஏதுமில்லை ! தன்னிறைவு அடையாத ஒரு மாபெரும் தேசத்தில் அது தவிர்க்க முடியாதது ! மக்களின் குறைகளை களைய ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பதுதான் ஒரே வழி ! அந்தந்த மாநிலங்களில்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதட்டமில்லாமல் ஆளவிட்டு, மக்கள் பணியாற்ற ஓயாமல் தூண்ட வேண்டும் ! இவைகளெல்லாம் தான் ஒரு தேசிய கட்சிக்கு அழகு !

அதற்கு மாறாக, பதவி ஆசை பிடித்தவர்களை எல்லாம்  பயன் படுத்திக் கொண்டு, மாநிலத்தை பெரும்பான்மையோடு   ஆளும் ஒரு கட்சியை பிளந்து, அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அலைக்கழித்து, ஆர்ப்பாட்டம் செய்து, அதனூடாக தங்கள் கட்சியை வலிந்து துருத்தி, பொது மேடைகளில் ஓங்காரமாகப் பேசி… இப்படியாக அரசியல் பிழைப்பதில் அர்த்தமுண்டா…? அதிகாரம் இருப்பதால் ஆட்டிப் படைக்க நினைப்பதா…? தாயில்லாப் பிள்ளையாய் எண்ணி தலையிலடித்துத் தள்ளுவதா…?

122 எம்.எல்.ஏக்கள் – 39 எம்.பி க்கள் – 1900 பொதுக்குழு உறுப்பினர்கள் என வரிசையிட்டுக் காட்டிய பின்பும், இல்லை நாங்கள் வைத்தது தான் சட்டம் என்பது முறைதானா..? இன்று அதிமுகவுக்கு நடந்தது நாளை திமுகவுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம் !? பாஜகதான் வெளிப்படையாகவே சொல்லி விட்டதே, “இரண்டு கழகங்களையும் ஒழிப்பதுதான் எங்கள் ஒரே நோக்கம்” என்று.

ஐம்பதாண்டுக் காலம் இந்த மண்ணை ஆண்ட இரண்டு கழகங்களையும் ஒரே இரவில் அப்புறப்படுத்த முனைவதெல்லாம் அரசியல் அவசரம் – ஆவேசம் அன்றி வேறென்ன..? இது போன்ற வெளிப்படையான – சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகள் எல்லாம் எந்தவிதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கொஞ்சமாவது சிந்தித்தார்களா…? தொலைக்காட்சிகளையும், பத்திரிக்கைகளையும் மட்டும் மடக்கி வைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்து விடலாம் என்று எண்ணுகிறார்களா..?

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்… தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் பாஜக இன்னமும் ஒரு புதுக் கட்சிதான். சாதாரண மக்களுக்குப் புரியாத கட்சிதான்.  இதை உணர்ந்து, தமிழக பாஜகவை பொதுமக்களோடு இணைந்து போகும் படியாக  மொத்தமாக – வலிமையாக மாற்றி அமைத்துப்  படிப்படியாகத் தங்களை வளர்த்துக் கொள்ள அவர்கள் முன்வர வேண்டும் !

அதை விட்டு விட்டு திராவிடத்தை அழிப்போம், அதிகாரத்தைக் கொண்டு முதுகில் கையை  வைத்து முறுக்குவோம், ஆட்சியைக் கலைப்போம், வழக்கு – சிறை எனப் பந்தாடுவோம் என்றெல்லாம் ஆர்ப்பரித்துக் காட்டிக் கொண்டிருந்தால்…

பாஜக என்றால் என்னவென்றே தெரியாத, கடைக்கோடி கிராமங்களின் சாதாரண மக்கள்… இதனை, தங்கள் மண்ணின் மேல் நிகழ்த்தப்படும் ஒரு “ஆக்ரமிப்பாக” எண்ணி நெளிய மாட்டார்களா….?

தமிழகத்தின் நீள – அகலத்தில் 50 ஆண்டுக் காலமாக வேறோடி இருக்கும் திராவிடச் சிந்தனையாளர்கள், “எங்களை அழித்து விடுவதாக சூளுரைப்பதா” என்று வெகுண்டெழ மாட்டர்களா…?

ஒரு ஜல்லிக்கட்டுக்கே… கார்பொரேட்டுகளோடு சேர்ந்து கொண்டு, 10 நாட்கள் மெரீனாவில் நம்மைக் காய வைத்தவர்கள்…இன்று வா, நாளை வா என கைவிரித்து அலைக்கழித்தவர்கள்…இங்கே காலூன்ற அனுமதித்து விட்டால் எப்படியெல்லாம் பந்தாடுவார்கள் என்று மாணவர்களும் – இளைஞர்களும் யோசிக்க மாட்டார்களா…? வழி விடுவார்களா…?

ஏற்கெனவே, மேற்கு வங்கத்திலும் – கேரளாவிலும் பலவீனப்பட்டு வரும் கம்யூனிஸ்டுகள் தமிழ் நாட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே… அவர்கள், தங்களின் பொது எதிரியைக் கருதி இங்கே ஒன்றிணையக் கூடுமல்லவா!?

இட ஒதுக்கீட்டை “நீட்”டமான தடி கொண்டு அடிக்கும் பாஜகவை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மறுதலிக்க மாட்டார்களா…?

“இவர்களுக்கே இந்தக் கதியென்றால்… நம் கதி என்ன….?” என்னும் அச்சம் பீடித்துக் கொண்டேயிருந்தால் சிறுபான்மை மக்கள் தெருவுக்கு வர மாட்டார்களா…?

இப்படி ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் ஒருமுகமாக இணைந்து மத்திய அரசின் மீது தங்கள் அச்சத்தை – வெறுப்பை வெளிக்காட்ட ஆரம்பித்தால்…ஏறத்தாழ 60 வருடங்களுக்கு முன்னால் மறக்கடிக்கப்பட்ட பிரிவினைவாத எண்ணம் மீண்டும் உயிர்த்தெழுந்து விடாதா…?

தமிழர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக எண்ணி மனம் குமைய ஆரம்பித்து விட்டால்… அந்த குமைச்சலுக்கு மருந்தென்ன..?

தங்களை நட்புணர்வோடு அரவணைக்காமல், ஆதிக்க வெறியோடு ஆட்டி வைக்க எண்ணுகிறார்கள் என்னும் எண்ணம் வலுப்பட்டுக் கொண்டே இருந்தால்…அதற்கு பரிகாரம்தான் என்ன..?

எண்ணிப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது ! அப்படி நடந்துவிடுமோ என்று மனம் சஞ்சலப்பட்டாலும், அதற்கான சாத்தியக் கூற்றை ஒரேயடியாக மறுத்து விடவும் முடியாது !

ஆம், வல்லரசான சீனாவின் ட்ராகன்… சற்றே சிலிர்த்துக் கொண்டு, இந்தியப் பெருங்கடல் வழியாக, ஏறக்குறைய நாலாயிரத்து ஐநூறு நாட்டிக்கல் மைல் தூரம்…தெற்கு நோக்கி செங்குத்தாகப் பாய்ந்து இறங்கி, தன் தலையை சற்றே வலப்புறம் திருப்பி, அரசியல் ஆதூரத்தோடு, தமிழ் மண்ணை நோக்கும் நிலை தோன்றக் கூடும் !

“வரைபடத்தை தாண்டி வாயேன்…”என்று வரையாட்டை அழைக்கக் கூடும் !

( தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published.