மீண்டும் ரூ.1லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்: அருண்ஜெட்லி தகவல்

--

டில்லி:

டந்த அக்டோபர் மாத  ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்து உள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்  ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம்கோடி ரூபாயை தாண்டிய நிலையில், தற்போது மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

இந்த தகவலை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தனது டிவிட்டர் பக்கத்தல் தெரிவித்துள் ளார். அதில், கடந்த அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல், 1 லட்சத்து 710 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

இது  கடந்த செப்டம்பர் மாத வரி வசூலுடன் ஒப்பிடுகையில் இது 6.64 சதவீதம் அதிகம் என்றும்,  அக்டோபர் மாதத்தில் 67 லட்சத்து 47 ஆயிரம் பேர் வரி செலுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 2018 ம் ஆண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது. குறைந்த வட்டி, குறைந்த வரி ஏய்ப்பு, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியன ஜிஎஸ்டி வெற்றி. ஒரே ஒரு வரி மட்டுமே. இடைத்தரகர்களின் தலையீடு புறந்தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை எட்ட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. இதன்படி நடப்பு நிதியாண்டின் ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ரூ.94,016 கோடியாகவும், ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.94,442 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த  ஏப்ரல் மாதம் மட்டுமே வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால் அது நிதியாண்டு நிறைவடையும் மாதம் என்பதால் பலரும் தங்களது வரி பாக்கியை செலுத்தியதால் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

You may have missed