சென்னை,

சிகலா குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. நேற்று முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை அடையாறில் உள்ள சசிகலா உறவினர் கார்த்திகேயன் வீடு, அலுவலகம், கோவையில் உள்ள கல்லூரி  உள்பட 14 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா,  பெங்களூரு சிறையில் உள்ளார். அவருடைய உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 200 இடங்களில் 1800 அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை  கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது.

சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், கோவை, கொடநாடு உள்ளிட்ட இடங்களிலும் பெங்களூரு, ஐதராபாத், புதுச்சேரியிலும் ஆகிய இடங்களில் சோதன நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோதனையின் முடிவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளி யானது. அதைத் தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள்ன ஜெயா டிவி விவேக், கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா வின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு  விசாரணைக்காக சென்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும்  சசிகலா உறவினர், இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான இடம் உட்பட 14 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் நேற்று 2வது முறையாக திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கார்த்திக்கேயன் வீடு படப்பை அருகே மணிமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோன், அடையார் இந்திரா நகரில் உள்ள இளவரசி மருமகன் கார்த்திகேயன் வீடு, மண்ணடியில் உள்ள கார்த்திகேயனின் நண்பர் குடோனில் சோதனை நடைபெற்றது.

மேலும்,  மிடாஸ் ஆலைக்கு பெட்டி அனுப்பும் நிறுவனம்மணிமங்கலத்தில் உள்ள குடோன், மிடாஸ் மதுபான ஆலைக்கு பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள் சப்ளை செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

ஸ்ரீசாய் குடோனில் சோதனையை முடித்துக் கொண்டு வருமான வரி அதிகாரிகள் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலைக்கு சென்றனர். நவம்பர் மாதம் மிடாஸ் மதுபான ஆலையில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்து இருந்தனர். அதிகாரிகள் நேற்று அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல்,  கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியான  எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் உரிமையாளர் சந்திரசேகர். இவர் மிடாஸ் நிறுவனத்துக்கு காலி பாட்டில்கள் சப்ளை செய்து வருகிறார். இவர் மற்றும் கல்லூரியின் தாளாளர் வீடு உள்பட பல இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மிடாஸ்  நிறுவனத்துடன் வணிக ரீதியாக தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்படும் சோதனையின் ஒரு பகுதியாகவே வருமான வரித்துறையினர் எஸ்விஎஸ் பொறியியல் சோதனையில் ஈடுபட்டள்ளனர்.

மேலும் சந்திரசேகருக்கு பாட்டில் சப்ளை செய்யும் மற்ற சில நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த சோதனையில் கல்லூரி அலுவலகத்தில் உள்ள சந்திரசேகரின் அறையில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகின்றது. கல்லூரி அலுவலக வளாகத்தில் சோதனை நடப்பதையடுத்து அலுவலக ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் இரவு வரை அவர்களை வெளியேறவும் அனுமதிக்கவில்லை.

அதே வேளையில் விடுதி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் செயல்பாடு வழக்கம் போல நடைபெற்று வருகின்றது. காலை 9 மணிக்கு துவங்கிய இந்த சோதனை 11 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.