மயிலாடுதுறை:
திருமணத்துக்கு மறுத்த காதலியை, காதலன் கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் மயிலூடுதுறையை அடுத்த ஆக்கூர் அப்பராஜபுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் தீபிகா (வயது19). இவர் பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் இறந்து விட்டதால் தாய் சுமதி பராமரிப்பில் தீபிகா இருந்தார்.
கடந்த 19ம் தேதி இரவு ஏழு மணி அளவில் தீபிகாவுக்கு போன் வந்தது. போனில் பேசியபடியே வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.  மறுநாள் இருபதாம் தேதி காலை, அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வாய்க்காலில் தீபிகாவின் உயிரற்ற உடல் கிடந்தது.
daily_news_4706188440323-copy-2
இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தார்கள். தீபிகாவின் போனில் யார் யார் பேசி இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இரு மாணவர்கள் சிக்கினர்.
இந்த நிலையில் நேற்று இரவு நாதல்படுகை என்ற கிராமத்தை சேர்ந்த அரசன் ( வயது 21)  என்பவர், பொறையாறு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தீபிகாவை தான் கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.
விசாரணையில் அவர் தெரிவித்ததாவது:
“நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு  படித்து வருகிறேன். இதற்கு முன் பூம்புகார் கல்லூரியில் படித்தேன். அப்போது தீபிகாவுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தீபிகாவுக்கும், அதே ஊரைச்சேர்ந்த அவரது உறவினர் மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை அறிந்து ஆத்திரமானேன்.
எனவே சம்பவத்தன்று மாலை பைக்கில் அவளை சந்திக்க சென்றேன். வழியில் என்னுடன் படிக்கும் ராஜ்மோகன் என்ற மாணவனையும் அழைத்துக்கொண்டு தீபிகா வசிக்கும், அப்புராஜபுரம் சென்றேன்.
அங்குள்ள மல்லேஸ்வரம் கோயிலில் பைக்கை நிறுத்தினேன். ராஜ்மோகனை பைக் காவலுக்கு வைத்து விட்டு நான் மட்டும் தீபிகாவை சந்திக்க சென்றேன். போனில் பேசி, திருமணத்துக்கு  கிப்ட் வாங்கி வந்திருப்பதாகக் கூறி, வாய்க்கால் அருகில் வரும்படி   அழைத்தேன்.

அரசன்
அரசன்

அவள் மறுத்தாள். நான் மிகவும் வற்புறுத்தவும் அவள் வந்தாள்.. எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. இனி நாம் சந்திப்பது முறையல்ல என்றாள்.
எனக்கு ஆத்திரம் அதிகமானது. அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடித்தேன். அவள் கீழே சாய்ந்து விட்டாள். பின்னர் நான் தப்பிச் சென்று விட்டேன்.
இந்த நிலையில் காவல்துறையினர் என்னை தேடுவதாக அறிந்தேன். இதையடுத்து சரண் அடைந்தேன்” என்று அரசன் தெரிவித்தார்.
இதையடுத்து  அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜ்மோகனும் கைது செய்யப்பட்டார்.