மீண்டும் போராட்டம்: மோடிக்கு, அன்னா ஹசாரே எச்சரிக்கை!

டில்லி,

லோக்பால் சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதிய அளித்த மோடி, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கள் ஆகியும் இன்னும் அதற்கான முயற்சி எடுக்காது ஏன் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை அமைக்காததைக் கண்டித்து, மீண்டும் போராட்டத்தை துவக்க உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக சேவகர் அன்னா ஹசாரே எச்சரித்து கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து,  அன்னா ஹசாரே சில கோரிக்கைகளை முன்வைத்து டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊழலற்ற இந்தியாவை உருவாக்க லோக்பால் அமைப்பு, விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி போராடினார்.

அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான  மத்திய அரசு உறுதி அளித்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து  லோக்பால் மசோதா, பார்லிமென்டில், 2013ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக லோக்பால் அமைப்பை கொண்டு வருவோம்’’ என பாஜக உறுதியளித்தது.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் லோக்பால் அமைப்பையும் மற்றும் சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்தாதது ஏன்? என அன்னா ஹசாரே, மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார்

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து, லோக்பால் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறியது. போராட்டம் நடந்து, ஆறு ஆண்டுகளாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

உங்கள் தலைமையிலான அரசு அமைந்து, மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தும்,  மத்திய அளவில் லோக்பால், மாநில அளவில், லோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்த அமைப்புகளை உருவாக்க வலியுறுத்தி, டில்லியில் மீண்டும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும்.

விவசாயிகளின் நலனுக்கான சுவாமிநாதன் அறிக்கையை செயல்படுத்த வலியுறுத்தியும், இந்தப் போராட்டம் நடைபெறும்.

அவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.