ஒகேனக்கல்லில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீணடும்  பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள்  79வது நாளாக குளிக்க விதிக்கப்பட்ட  தடையும் நீடித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு  அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  ஒரே நாளில் 6,000 கன அடியில் இருந்து 25,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. படகு சவாரி செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கர்நாடகாவில் பெய்த  தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளில் இருந்து சுமார் 2 லட்சம் கனஅடி வரை உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. பின்னர் மழை குறைந்ததும் நீர் வரத்து குறைந்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு வரக்கூடிய நீரின் அளவு திடீரென 20 ஆயிரம் கனஅடியாக  உயர்ந்து உள்ளது.

நீர்வரத்து எட்டாயிரம் கனஅடியில் இருந்து திடீரென 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு செல்லக்கூடிய பாதையில் தண்ணீர் வழிந்தேடி வருகிறது. இதனால், ஒகேனக்கல் ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.