சென்னை,

ரும் செப்டம்பர் 7ந்தேதி முதல் மீண்டும்  தமிழகம் முழுவதும்  வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ அதிரடியாக தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே அரசியல் காரணங்களால் தமிழக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ள நிலையில், அரசு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக   தமிழக அரசு பணிகள் முழுவதுமாக முடங்க வாய்ப்பு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும், தமிழகத்தில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 73 சங்கங்கள் இணைந்த ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு கடந்த 5ந்தேதி சென்னையில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொண்ட பிரமாண்ட பேரணியை நடத்தி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், அவர்களின்  கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால், மீண்டும் கடந்த 22ந்தேதி ஒரு நாள் அடையாள போராட்டம் மேற்கொண்டனர்.

அவர்களின் போராட்டம் காரணமாக அன்று அரசு பணிகள், அரசு பள்ளிகள் 80 சதவிகிதம் முடங்கின.

அப்போது அரசு ஊழியர் சங்கங்களை அரசு அழைத்து பேச வேண்டும் என்று சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசு இதுவரை  அவர்களது கோரிக்கை குறித்து  செவி சாய்க்காத நிலையில், மீண்டும் போராட்டத்தை நடத்த முன்னெடுத்துள்ளது.

அதன்படி வரும் செப்ம்பர் 7 முதல் மீண்டும் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர்  7ம் தேதி வட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல்.

செப்டம்பர்  8ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல்.

அதைத்தொடர்ந்து செப்டம்பர் 10ந்தேதி தொடர் போராட்டங்களை நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதரண சூழ்நிலையில், அரசு ஊழியர் சங்ககளின் மிரட்டல் அறிவிப்பும் தமிழகத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் அரசை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.