தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்: போலீஸ்மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி:

தூத்துக்குடி பகுதியில் நேற்று மக்கள் மீது போலீசார் நடத்திய அத்துமீறிய துப்பாக்கி சூடு காரணமாக இன்றும் அந்த பகுதியில் பதற்றம்  நீடித்து வருகிறது.

இன்று தூத்துக்குடி அண்ணா நகர் 6- வது தெருவில் ரோந்து சென்ற போலீசாரை நோக்கி மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு தப்பினார். அதைத்தொடர்ந்து  அண்ணாநகர் பகுதியில் இன்று போலீசார் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் காளியப்பன் (22) உயிரிழந்தார். மேலும்  5 பேர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக தூத்துக்குடியின் பல பகுதிகளில் பொதுமக்கள் மீண்டும் கூட்டம் கூட்டமாக திரண்டனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கும்  போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  பொதுமக்கள் கூடுவதை தடுக்க தெருக்கள் முழுவதும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வீடு வீடாக புகுந்து அங்குள்ள ஆண்களையும், இளைஞர்களையும் அதிரடிப்படையினர் கைது செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.