கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: காவிரியில் வெள்ள அபாயம்

மேட்டூர்:

ர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம்  மற்றும் மேற்கு தொடர்ச்சி மழைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள  கபினி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பியது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி,கபினி, மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர்  காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.  தொடக்கத்தில் கொஞ்சமாக வந்த நீர், கர்நாடகாவில் அதிகரித்த கனமழை காரணமாக வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் அளவுக்கு திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேட்டூர் அணையும் இந்த 3 முறை முழு கொள்ளவை எட்டி சாதனை படைத்தது. இந்த நிலையில் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடும் அளவை குறைத்து வந்தது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கனஅடி அளவிலேயே தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் படிப்படியாக குறைக்கப்பட்டது. 16 கண் பாலம் மதகு வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில்  வெள்ளம் குறைந்து இயல்பு நிலை ஏற்பட்டது. அதையடுத்து, 42 நாட்களுக்கு பிறகு ஒகனேக்கல் காவிரி ஆற்றில்  நேற்று மீண்டும் பரிசல் சவாரி தொடங்கப்பட்டது.  ஆனால், தற்போது  கர்நாடகாவின்  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும்மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து நேற்று இரவு முதல் தண்ணீர் திறந்துவிடும் அளவு உயர்த்தப்பட்டது. தற்போது, காவிரியில் வினாடிக்கு 32 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கபினி அணையில் இருந்து  11 ஆயிரத்து 458 கன அடி தண்ணீரும், கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு  21 ஆயிரத்து 201 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

இந்த தண்ணீர் நேராக தமிழகத்தை நோக்கி சீறிப் பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரியில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை பக்கம் யாரும் செல்லாத வகையில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: again Water released from Karnataka dams: flood in Cauvery, கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
-=-