சென்னை:

25 நாட்கள் வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து வெயிலின் தாக்கம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. வழக்கம்போல இந்த காலட்டத்தில்  தமிழகம் முழுவதும் வெயில் மிக அதிகமாக இருந்தது.  பகலில் வெப்பத்தினாலும், இரவில் புழுக்கத்தினாலும் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

இந்த காலகட்டத்தில் சென்னை, வேலூர், திருத்தணி, கரூர், பரமத்தி உள்ளிட்ட பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ததுதான் ஆறுதல்.

ஆனால் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே இருந்தது.   நேற்று திருத்தணியில் 103 டிகிரி வெயிலும், வேலூரில் 100 டிகிரி வெயிலும் பதிவானது.

கடந்த 25 நாட்களாக கடுமயாக இருந்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. ஆகவே இனி வெப்பத்தின் தாக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கத்திரி வெயில் முடிவடைவது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“கத்திரி வெயிலுக்கும், வானிலை ஆய்வுக்கும் தொடர்பு கிடையாது. பஞ்சாங்கத்தின் படியே கத்திரி வெயில் கணிக்கப்படுகிறது. தெற்கு அந்தமானில் தற்போது தென் மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளது.  பருவ மழை தமிழகத்தை நெருங்கி வரும்போது ஈரப்பத காற்று வீசக்கூடும். இதனால் வெப்பத்தின் தாக்கம் குறையும். கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் தமிழகத்தில் வெப்பம் மேலும் குறையும்.

வெப்பச்சலனம் காரணமாக வட உள்தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கிறார்கள்.