அக்னி வெயில் இன்று தொடக்கம்….! பொதுமக்களே உஷார்….

சென்னை:

மிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கும், அனல்காற்று வீசும்  என  எச்சரிக்கப் பட்டு உள்ளது. வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் பாட்டலுடன்  தேவையான பாதுகாப்புடன் செல்வது நலம்.

அக்னி நட்சத்திரம் இன்று முதல்  வருகிற 29-ந்தேதி வரை நீடிக்கிறது. இந்த நேரங்களில்  அனல் காற்று வீசுவதுடன் வழக்கத்தை விட வெப்பமும் அதிகரிப்பது வழக்கம். ஏற்கனவே தமிழகத்தில் மழை சரியானபடி பெய்யாததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வெயில் கொளுத்தி வருகிறது.

தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால்,  அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

அக்னிவெயில் தொடர்பாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது,  தமிழகத்தை பொறுத்த வரையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்.

தமிழகத்தில் கொளுத்தும் வெயில் தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   சென்னை உட்பட 13 மாவட்டங்களில் வெப்ப அலை சூழ்நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா நோக்கி சென்ற ஃபானி புயல் தமிழகத்தின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துச் சென்று விட்டதால், வறண்ட மேற்குக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. மேகமற்ற வானம், பிரகாசமான சூரியன் ஆகியவற்றினால் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும்,  தரைக்காற்று வலுவாகியுள்ளதால் இதனை குளிர்ப்படுத்தும் கடற்காற்றின் குறுக்கீடு தாமதமாகியுள்ளதால்  அசவுகரிய வெப்ப நிலை தொடரும். 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நீடிக்கும், என்று சென்னை வானிலை மையமும் தெரிவித்து உள்ளது.

வெயிலில் இருந்து தப்பிக்கவும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துகொள்வது நன்மை பயக்கும்.