நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

சென்னை

நாளை முதல் தொடங்கும் அக்னிநட்சத்திரம் மே 28 வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூரி உள்ளது.

இந்த ஆண்டு கோடை காலத்தில் தொடக்கத்தில் இருந்தே வெயில் மக்களை வாட்டி வருகிறது.   தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை ஏப்ரல் மாதத்திலேயே தாண்டியது.   அத்துடன் கடுமையான அனல் காற்றும் இரவு நேரங்களிலும் குறையாத வெப்பமும் மக்களை மேலும் துயருக்குள்ளாக்கியது.

நாளை வெள்ளிக்கிழமை முதல் கத்திரி வெயில் என கூறப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.   இது வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது.    சுட்டெரிக்கும் வெயிலை தற்போதே தாங்க முடியாத நிலையில் உள்ள நிலையில் இந்த அக்னிநட்சத்திரம் பொதுமக்களை மேலும் அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர், “அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெய்யில் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை இருக்கும்.   வெப்பம் அதிகமாகவும் அனல்காற்று அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.

தமிழகத்தின் பிற பகுதிகளைப் போல சென்னையில் வெப்பமும் அனல் காற்றும் அதிகரிக்கும்.   வெப்ப சலனம் காரணமாக கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது.  கடலோர மாவட்டத்தில் காற்றின் திசையைப் பொறுத்து வெப்ப நிலையில் மாறுதல் உண்டாகும்.” என தெரிவித்துள்ளார்.