ஆக்ராவில் இஸ்லாமிய மக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பு

ஆக்ரா:

ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்கும் வகையில் இஸ்லாமிய சமுதாயத்தினர் ஆக்ராவில் ‘திரங்கா பேரணி’’ சென்றனர். இந்த பேரணியை சாஹித் ஸ்மார்க் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணிக்கு அனுமதி இல்லை என்று கூறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அவர்களின் கோரிக்கை மனுவில்,‘‘ இஸ்லாமியர்களுக்கு எதிராக அசிங்கமான வார்த்தைகள் மற்றும் கோஷம் எழுப்புவது கிரிமினல் குற்றமாக கருத வேண்டும். மதத்தில் அரசியலை புகுத்த கூடாது. தேசியவாதம், வந்தே மாதரம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்’’ போன்ற கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கொடிக்கு மரியாதை அளிக்கவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்த்தும் இந்த பேரணியை நடத்த ஆக்ரா இஸ்லாமிய மக்கள் முடிவு செய்திருந்தனர். இந்த பேரணிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதேபோல் சில தினங்களுக்கு முன்பு விஹெச்பி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திரங்கா பேரணிக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.