டிரம்ப் வருகையால் யமுனைக்குத் திறந்து விடப்படும் தூய நீர் – நாற்றம் குறையுமா?

புதுடெல்லி:  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆக்ரா வருகையையொட்டி யமுனையின் மாசடைந்த நிலையைத் தற்காலிகமாக சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது உத்திரப்பிரதேச அரசு. அத்திட்டத்தின் ஒரு அங்கமாக யமுனை நதியில் 500 கியூசெக் தூய நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கங்கனஹாரில் இருந்து விடப்பட்டுள்ள நீர் பிப்ரவரி 20ம் தேதிக்குள் மதுராவில் உள்ள யமுனையையும் பிப்ரவரி 21ம் பிற்பகலுக்குள் ஆக்ராவை வந்தடையும் என்று கூறப்படுகிறது.

இந்நடவடிக்கையால், யமுனையின் துர்நாற்றம் குறையக்கூடும் என்று மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியது. மேலும், இது மதுரா மற்றும் ஆக்ராவில் யமுனையின் ஆக்ஸிஜன் அளவினை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் ஆக்ரா வருகையை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிரம்ப் பிப்ரவரி 24ம் தேதி ஆக்ரா வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் அவர் அங்குள்ள ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டலில் தங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது அவர் ஹூஸ்டனில் இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றினார்.  அது நிகழ்ந்து  5 மாதங்களுக்குப் பிறகு டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்பதும் உலகின் மிகப்பெரிய அரங்கமான சர்தார் வல்லபாய் படேல் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதே போன்ற ஒரு  நிகழ்சியில் அவர் பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் டிரம்ப் குஜராத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அமெரிக்காவில் குடும்பங்களைக் கொண்டவர்கள் முன்னிலையில் உரையாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.