டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் இருந்து வெளியேறுவது  குறித்து சீனாவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டு உள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் எல்லை விவகாரத்தில்  ‘ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என உறுதி அளித்துள்ளார்.

இந்திய – சீன எல்லையான காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில் அவ்வப்போது இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே 2020ம் ஆண்டு  ஜூன் மாதம் எல்லையில் சீன அத்துமீறிய போது, இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த துயரச் சம்பவத்தில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்தது. ஆனால், இரு தரப்பு ராணுவ உயர்அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போர் அபாயம் விலகியது.

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக, இந்திய  சீனா ராணுவ உயர்அதிகாரிகள் இடையே இதுவரை 9 முறை பேச்சுவார்த்தயை நடத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் குறிப்பிடும் அளவிற்கான முன்னேற்றம் ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர்,  லடாக் கிழக்குப் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை. எல்லையில் படைகளை குவித்து அச்சுறுத்திய சீனாவை சமாளித்து இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். லடாக் எல்லையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் அதை சந்திக்க  இந்தியா தயாராக உள்ளது. லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு இன்ச் நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றவர்,  எல்லை பதற்றத்தை  தணிக்க 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், எல்லையில் உள்ள  பாங்காங் ஏரி அருகே குவிக்கப்பட்டிருக்கும் படைகளை  இருதரப்பும்  விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. அதுதொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.