வாஷிங்டன்: யூத நாடான இஸ்ரேல், முஸ்லீம் நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் இடையே, அமெரிக்க அதிபர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் என்ற தனிநாடு கடந்த 1948ம் ஆண்டு உருவான பிறகு, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய அண்டை நாடுகள் மட்டுமே, இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன.

அதன்பிறகு, பல்லாண்டுகள் கழித்து தற்போது அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள், இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இரு நாடுகளும் தங்கள் உறவில் சுமூக நிலையை உருவாக்கவும் தூதரங்களை ஏற்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன. . இருநாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் என செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், இஸ்ரேல், அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

வெள்ளை மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யகு, அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான், பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.