போலீஸ்காரருக்கு தோப்புக்கரணம்… வேளாண் அதிகாரி வெறிச்செயல்

போலீஸ்காரருக்கு தோப்புக்கரணம்… வேளாண் அதிகாரி வெறிச்செயல்

கொரோனா தடுப்பு பணியில் முன் வரிசையில் நிற்கும், டாக்டர், போலீஸ்காரர் போன்றோர் ஏளனம் செய்யப்படுவதும், தரக்குறைவாக நடத்தப்படுவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.

அந்த வரிசையில் பீகார் மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம்.

அங்குள்ள அரரியா மாவட்டம் சூரஜ்பூரில் கணேஷ் லால் என்ற போலீஸ்காரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி, ‘’ ஊரடங்கு பாஸ் உள்ளதா?’’ என்று கேட்டுள்ளார்.

அந்த வாகனத்தில் பயணித்தவர்-

மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலர் மனோஜ் குமார் என்பவர் ஆவார்.

கோபக்கார அதிகாரி.

‘என்னையே மறிக்கிறாயா? முக்கியமான கொரோனா கான்பரன்ஸ் கூட்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். என்னைத் தடுத்து காலதாமதம் செய்து விட்டாய்’’ என்று வானுக்கும்,பூமிக்குமாய் குதித்துள்ளார், ஆபீசர்.

கண்டபடி, போலீஸ்காரர் கணேஷை திட்டித்தீர்த்த    ஆபீசர், ’’50 தோப்புக்கரணம் போட்டால் தான் உன்னை மன்னிப்பேன்’’ என்றும் மிரட்டியுள்ளார்.

‘பிள்ளைப்பூச்சியான’ அந்த போலீஸ்காரரும் வேறு வழி இல்லாமல், இரு கைகளால் காதை பிடித்த படி 50 தோப்புக்கரணம் போட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சி, பீகார் முழுவதும் வரலாகப் பரவி வருகிறது.

கடமையைச் செய்த போலீஸ்காரர், தண்டிக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள போலீசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்