டெல்லி: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாக்கள் ஜூன் 5ம் தேதி அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்ட நாளிலிருந்தே பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு குரல் எழுப்பினர்.

தற்போது இவை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சில மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் போராட தொடங்கி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக டெல்லியில் வேளாண் மசோதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.