வேளாண் மண்டலம் விவகாரம்: திமுக, அதிமுக இடையே காரசார வாக்குவாதம்
சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது, எதிர்க்கட்சித் துணைத்தலைவரும்,திமுக எம்எல்ஏவுமான துரைமுருகன் வேளாண் மண்டலம் தொடர்பாக பேசினார்.
‘அப்போது, அதிமுகவுக்கும் அவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் சிஏஏ போராட்டம் குறித்து பேச திமுக முற்பட்டபோது, அதை சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலம் என அறிவித்துள்ளது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்த பிறகு அறிவித்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு பதில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், ”டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை திமுக வரவேற்கிறது; அதே நேரத்தில், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்தப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், நீங்கள் திட்டத்தை கொண்டு வருகிறீர்கள்; நாங்கள் வலியுறுத்த வேண்டுமா என கேள்வி எழுப்பினார்?
இதைத்தொடர்ந்த, மத்திய அரசில் அங்கம் வகிப்பது தொடர்பாக திமுக அதிமுக இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.