டிரம்ப் குஜராத் வருகை: பான் கடைகளை மூட மாநில அரசு உத்தரவு

அகமதாபாத்:

மெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகை தர உள்ள நிலையில்,  மாநில பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகரத்தை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அகமதாபாத்  நகரில் டிரம்ப் விசிட் செய்யும் பகுதிகளில் உள்ள பான் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது. மேலும், சாலையோரங்களில் உள்ள சுவர்களின் உள்ள பிரசார நோட்டீஸ்களை அகற்றி சுத்தப்படுத்தியும் வருகிறது.

பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் டிரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் டெல்லிக்கும் வருகை தர உள்ளனர். டிரம்ப் வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரைப் புதுப்பிக்கும் பணிகளை மாநில அரசும், அகமதாபாத் கார்ப்பரேசனும் முடுக்கி விட்டு உள்ளன.

டிரம்ப் பார்வைக்கு தெரியாத வகையில் குடிசை பகுதிகளை மறைத்து சுமார் 8 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு வரும் நிலையில், சேரிப்பகுதிகளில் குடிசைப்போட்டு வசித்து வந்தவர்களையும் உடனே காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அகமதாபாத் நகரம் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அங்குள்ள பான் கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டு உள்ளது. அந்த பகுதிகளில் உள்ள சுவர்களையும் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிரம்ப்  அகமதாபாத் வருகையொட்டி, நமஸ்தே டிரம்ப் என்று வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கான பல இடங்களில் மலர்களான அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அகமதாபாத்தில் உள்ள 1.1 லட்சம் இருக்கைகள் கொண்ட பிரமாண்ட மோட்டேரா மைதானத்தில்  ‘கெம் சோ ட்ரம்ப்’ என்ற பொதுக் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றுவார்  என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூடுதலாக 10 ஆயிரம் இருக்கைகள் இடம் பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கூறியுள்ள நகராட்சி ஆணையர், அமெரிக்க அதிபரின் வருகைக்காக நகரை அழகுப்படுத்தும் பணிகள் செய்து வருவது அவசியமான ஒன்று. அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் வரை அதாவது அனைவரும் அறியக்கூடிய கெம் சோ ட்ரம்ப் (ஹௌடி டிரம்ப்) நிகழ்வு நடைபெறும்.

மோடேரா ஸ்டேடியம் வரை வழியெங்கும் தெரு நாய்களும் கால்நடைகளும் அங்குமிங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும். ஆனால், அமெரிக்க அதிபர் வரும்போது சாலை தூய்மையடைந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

விமான நிலையத்திலிருந்து சபர்மதி (மகாத்மா காந்தி) ஆசிரமம் மற்றும் மோடேரா மைதானம் வரை ஒரு டஜன் சாலைகள் மற்றும் வீதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. நகராட்சியும் மெட்ரோ ரயில் நிர்வாகமும் இணைந்து, நடைபாதைப் பகுதிகள் மற்றும் மின் கம்பங்கள் மற்றும் தூண்களில் வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.