பட்ஜெட் தயாரிப்பு தீவிரம்: பெரும் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி :

த்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பெரும் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய நிதி மற்றும் பொதுபட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.  2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர்  நிர்மலா சீதாராமன் 2வது முறையாக  தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்.

பட்ஜெட் தொடர்பாக ஏற்கனவே பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தியவர், மாநில நிதி அமைச்சர்களிடமும் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, நேற்று பிரதமர் மோடி நாட்டின் பெரும் தொழிலதிபர்களுடன் சந்திப்பு நடத்தினார்.

தொழிலதிபர்கள், முகே‌ஷ் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் பாரதி மிட்டல், கவுதம் அதானி, ஆனந்த் மகிந்திரா, அனில அகர்வால், வேணு சீனிவாசன், சந்திரசேகரன் உள்பட பல தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை பெருக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில்  சரிவை நோக்கி செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை  வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்லும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது. இதனால் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக பட்ஜெட்டிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.