டில்லி

அசோகா பல்கலைக்கழகத்தில் இருந்து பிரபல பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரபல பொருளாதார நிபுணரான அரவிந்த் சுப்ரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக முன்பு பணி புரிந்து வந்தார்.  அந்த பதவியில் இருந்து அவர் கடந்த 2018  ஆம் வருடம் விலகினார்.   அதற்கு காரணம் தனது குடும்பச் சூழல் என அவர் ராஜினாமா கடிதத்தில் கூறி இருந்தாலும்  அது குறித்துப் பல ஊகங்கள் எழுந்தன.

அரவிந்த் சுப்ரமணியன் சென்ற ஆண்டு ஜூலை மாதம் அசோகா பல்கலைக்கழக பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். அத்துடன் அவர் அந்த பல்கலைக்கழக பொருளாதார கொள்கை மைய நிறுவன இயக்குநரும் ஆவார்.   தனது இந்த பணியின் மூலம் அவர் இந்தியா மற்றும் உலக பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகவும் தொண்டாற்றி வந்தார்.

இந்நிலையில் அரவிந்த் சுப்ரமணியன் தனது பேராசிரியர் பதவியில் இருந்து விலகுவதாக அசோகா பல்கலைக்கழக துணை வேந்தருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.   அவர் தனது கடிதத்தில் அதே பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த பி பி மேத்தா எனப்படும் பிரதாப் பானு மேத்தா விலகலால் தாமும் விலக் நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பி பி மேத்தா அசோகா பல்கலையில் பணி புரிந்தபடியே ஒரு செய்தி ஊடகத்துக்குக் கவுரவ ஆசிரியராகவும் இருந்தார்.  அவர் கடந்த 17 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதற்குக் காரணம் அந்த செய்தி ஊடகத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டது என பேசப்பட்டது.  தற்போது அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா கடிதத்தின் மூலம் அது உறுதி ஆகி உள்ளது

அரவிந்த் சுப்ரமணியன் தனது ராஜினாமா கடிதத்தில்,

”மாணவர்களுக்குக் கற்பித்தல், ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடர்புக்கான தேசிய திறனை வளர்ப்பதற்கும், பொருளாதார கொள்கைக்கான மையத்தை உருவாக்கவும் நான் அசோகா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.   இந்த பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நான் பல நிகழ்வுகள், ஆய்வு திட்டங்கள் ஆய்வாளர்கள் குழுவை எனது எதிர்பார்க்கும் அதிகமாக அமைக்க முடிந்தது.

இதற்காக மாணவர்கள் மற்றும் பல்கலை சக ஊழியர்கள் எனக்குப்  பெரிதும் உதவியுள்ளனர். பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா ராஜினாமா செய்துள்ளார்.   அதற்கான சூழ்நிலைகள் ஏதுவாக இருந்தாலும் அவர் அனைவருக்கும் நண்பராகவும் ஊக்கமளிப்பவராகவும் இருந்தார்.

அசோகா பல்கலைக்கழக அறங்காவலர்கள் இவ்வளவு சிறப்பாகக் கழகத்தை நடத்தியதற்கு நான் பலமுறை பாராட்டி உள்ளேன்.  அதே வேளையில் புகழ்பெற்ற ஒருவரை ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்தது கவலை அளிக்க கூடியதாகும்.   இனி அசோகா தனது தனிப்பட்ட அந்தஸ்து மற்றும் தனியார் மூலதனத்தின் ஆதரவில் ஒரு கல்வி வெளிப்பாட்டுக்கு இடம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த கல்வி ஆண்டின் இறுதியிலிருந்து நான் எனது பதவியில் இருந்து விலகுகிறேன் .   இது எனக்கு ஆழ்ந்த சோகத்தை அளிக்கிறது.  இந்த பல்கலையின் எதிர்கால வெற்றிக்கு உங்களுக்கும் அதன் திறமை மற்றும் ஊக்கமுள்ள மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.