கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாலத்தீவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு தேடிச் சென்று மாலத்தீவு விளையாட்டுத்துறை அமைச்சர் விலையில்லா நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.

இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைச்சரின் இந்த செயல் தங்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தாக பொதுமக்கள் புகழாரம் சூட்டி உள்ளனர்.

தெற்காசிய நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் உள்ள ஒரு சொகுசு விடுதி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கடந்த 7-ந்தேதி கண்டறியப்பட்டது. இத்தாலி சுற்றுலா பயணி ஒருவர் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாலத்தீவில் உள்ள பெரும்பாலான சொகுசு விடுதிகள் மூடப்பட்டன. அங்கு இதுவரை 8 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில் மாலத்தீவில் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த செயலில் அந்நாட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுகளின் அமைச்சர் அஹ்மத் மஹ்லூஃப் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அங்குள்ள பெரும்பாலான மக்களின் வீடுகளுக்கு அவரே பைபகளில்  நிவாரணப் பொருட்களை எடுத்துச்சென்று நேரடியாக வழங்கி வருகிறார்.  அவரது இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பொதுமக்களில் ஒருவர் , இளைஞர் நலத்துறை மந்திரி அகமது மஹ்லூப்பை எங்கள் வாசலில் பார்த்தது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக, இந்த இந்த தொற்றுநோய் ஊரடங்கின்போது, நீங்கள் செய்து வரும்  வேலைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.