டில்லி:

குஜராத் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற ராஜ்யசபாவுக்கு மூன்று எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிட்டார்.

மொத்தமுள்ள 3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று பாஜக, ஆள் இழுப்பு வேலையை செய்தது.

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் ஒரு எம்பியை தேர்ந்தெடுத்துவிட முடியும். காங்கிரஸ் கட்சிக்கு 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருப்பதால் அகமதுபட்டேல் வெற்றி பெறுவது உறுதி என நம்பப்பட்ட சூழலில், குதிரை பேரத்தை ஆரம்பித்தது பாஜக.

சில வாரங்களுக்கு முன்பு குஜராத் மாநில காங்கிரசின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சங்கர்சிங் வகேலா அக்கட்சியில் இருந்து விலகினார். மேலும், அவருக்கு ஆதரவாக 6 எம்.எல்.ஏ.க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரசின் பலம் 51 ஆகவும் குறைந்துபோனது.

அவர்களையும் இழுக்க பாஜக முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆகவே அவர்களை பெங்களூரு அருகேயுள்ள ரிசார்ட்டுக்கு காங். மேலிடம் அழைத்துச் சென்றது. ஆனால் 44 எம்எல்ஏக்கள்தான் ரிசார்ட் சென்றனர். மற்ற 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செல்லவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. இது மத்திய பாஜக அரசின் உள்நோக்கமுள்ள நடவடிக்கை என்று புகார்கள் கிளம்பின. இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச் சீட்டில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக ‘நோட்டா’ வசதியும் முதன் முறையாக சேர்க்கப்பட்டு இருந்தது.

இது காங். தரப்பினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் . காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலும் அகமது பட்டேல் வெற்றி பெறுவாரா.. கட்சி மாறி யாராவது ஒரு காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டளித்துவிடுவாரா என்ற அச்சம் காங் தரப்பில் ஏற்பட்டது.

ஏனென்றால் ஒரு ஓட்டு குறைந்தாலும் அமது பட்டேல் தோல்வி அடையும் நிலை. அதே நேரம் பாஜகவின் பல்வந்த்சிங் ராஜ்புத்துக்கு 31 ஓட்டுகளே கிடைக்கும். அவர் வெற்றி பெற மேலும் 14 ஓட்டுகள் தேவைப்படும் நிலை. காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் குஜராத் பரிவர்த்தன் கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.வும் இருக்கின்றனர்.

இதில் தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அகமது பட்டேல் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடன் இருந்தவர்கள். ஆகவே அவர்கள் ஆதரவு காங்கிரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2பேர் தாங்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தனர்.

ஆகவே அவர்கள் வாக்குகளை செல்லாது என அறிவிக்க காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பாஜகவோ, மூத்த அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அமைச்சர் குழுக்களை அனுப்பி, மாற்றி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லும் என அறிவிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பாஜக தலைவரும், வேட்பாளர்களில் ஒருவருமான அமித்ஷா, தேர்தல் ஆணைய அலுவலகம் வெளியே நாற்காலி போட்டு அமர்ந்தேவிட்டார். ஆனால் மத்திய பாஜக அரசின் நெருக்கடிகளுக்கு தேர்தல் ஆணையம் அசைந்து கொடுக்கவில்லை. மாற்றி வாக்களித்த இரு காங். எம்எல்ஏக்கள் வாக்குகளையும் ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ரகசிய வாக்கெடுப்பு விதிமுறைகளை அவர்கள் மீறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

தேர்தல் ஆணைய முடிவு, அகமது பட்டேல் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. ஆனால் பாஜக எம்எல்ஏ ஒருவர் அகமது பட்டேலுக்கு வாக்களித்ததாக பேட்டியளித்தார்.

இதனால் நள்ளிரவு 1.20 மணியளவில் பாஜக புகார் அளிக்க… வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தப்பட்டது. ஆனாலும் உடனடியாக மீண்டும் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

இத்தனை களேபாரங்களுக்கு இடையே அகமது பட்டேல் 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல பாஜக சார்பில் போட்டியிட்ட அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாஜகவின் 3வது வேட்பாளர் பல்வந்த்சிங் ராஜ்புத் தோல்வியடைந்தார். பாஜகவின் குதிரை பேரத்தால் பரபரப்பு ஏற்பட்டு, இறுதியில் அக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்ததோடு குஜராத் ராஜ்யசபை தேர்தல் நிறைவடைந்தது.