அகமதாபாத்மும்பை புல்லட் ரயிலின் பயணக் கட்டணம், ஏசி முதல் வகுப்பை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கும்.
bullet train ticlet cost
ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்த மும்பை மற்றும் அகமதாபாத் இடையே வரவிருக்கும் புல்லட் ரயில் சேவையின் கட்டணம், இப்போது நிலவும் முதல் வகுப்பு ஏசி கட்டணத்தை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, புதன்கிழமை அன்று பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டிற்கு, மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இயங்கும் துரந்தோ எக்ஸ்பிரஸின் தற்போதைய ஏசி முதல் வகுப்பு கட்டணம், ரூ. 2,200. அதாவது, இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே உள்ள 508 கி.மீ. தூரத்தை, அதிவேகமாக கடக்க எண்ணும் போது, அதன் கட்டணம் ரூ.3,300 ஆக இருக்கும்.
ஜப்பானில் ஷின்கான்சென் என்று அழைக்கப்படும் புல்லட் ரயில் நெட்வொர்க் மூலம் டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே உள்ள 550 கி.மீ. தூரத்தில் இயங்க, கிட்டதட்ட ரூ.8,500 வரை செலவாகிறது.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்திய நெட்வொர்க்கின் முதல் பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு 350 கிமீ அதிகபட்ச வடிவமைப்பு வேகமும், இயக்க வேகம் ஒரு மணி நேரத்திற்கு 320 கி.மீ. ஆகவும் இருக்கும் என்று ரயில்வே மாநில அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறினார்.

2023 இல் இரண்டு வழிகளிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 36,000 தினசரி பயனர்கள் இருப்பார்கள் என்றும், 2053 இல் அந்த எண்ணிக்கை 186,000 ஆக அதிகரிக்கும் என்றும் அமைச்சகம் எதிர்பார்க்கிறது.   “வேகமான ரயிலின் மொத்த பயண நேரம் 2.07 மணி நேரம் மற்றும் ஒவ்வொரு நிலையத்தில் நின்று செல்லும் ரயிலின் பயண நேரம் 2.58 மணி நேரம்”, என்று சின்ஹா கூறினார்.

அமைச்சகம் இந்த வேகமான ரயிலுக்காக மொத்தம் 12 நிலையங்களைத்  திட்டமிட்டுள்ளது- மும்பை, தானே, விரார், பொய்சார், வேப்பி, பிலிமோரா, சூரத், பருச், வதோதரா, ஆனந்த், அகமதாபாத் மற்றும் சபர்மதி. “இதை நிறைவேற்ற சுமார் ரூ.97,636 கோடி மொத்தம் செலவாகும்,” என்று அமைச்சர் கூறினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ஜி.ஹரி  கூறுகையில், “மேலும், சீனாவுடன் அரசாங்கங்களின் ஒத்துழைப்பு மூலம், புது தில்லி-சென்னை ரயில்பாதையில் ஒரு பகுதியாக தில்லி-நாக்பூர் இடையே ரயிலை இயக்கி ஒரு செயலாக்க ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று  கூறினார் .

சுரேஷ் பிரபு

மக்களவையில் கடந்த வாரம் நடந்த விவாதம் ஒன்றில், புல்லட் ரயில் நாட்டின் ஒரு செலவு மிகுந்த திட்டம் என்ற விமர்சனத்தை ஒதுக்கி, வெறும் 0.1 சதவீதம் வட்டியில் ஜப்பானிடமிருந்து ரூ .1 லட்சம் கோடி எளியக் கடனை ஏற்பாடு செய்ய அரசாங்கத்தால் முடிந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
“புல்லட் ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பம், சாதாரண இரயில்களின் சேவைகளையும் சமிக்ஞை அமைப்பின் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த உதவும்,” என்ற பிரபு, இந்த ரயில்களை அறிமுகம் செய்வதற்கு எதிராக “வேண்டுமென்றே தவறான தகவல்கள்” பரப்பப்படுவதாக எண்ணுகிறார்.
 
எனினும் கட்டுப்படியாகாத கட்டணத்தினால்  புல்லட் ரயிலில் பயணிக்கும் ஏழைகளின் கனவு புஸ்வானம் ஆகும் நிலை நிலவுகின்றது.