டில்லி:

கடந்த 9ம் தேதி டில்லியில் இருந்து சிகாகோவிற்கு 323 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. 16 மணி நேர பயணத்திற்கு பின்னர் சிகாகோவில் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது அங்கு தட்பவெட்ப நிலை மோசமாக இருந்தது.

இதையடுத்து அந்த விமானம் மில்வாவ்கி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இது 19 நிமிட பயண தூரம் மட்டுமே. ஆனால், இந்த விமானம் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. அங்கு விமானம் தரையிறங்கியவுடன் விமான சிப்பந்திகளுக்கான பணி நேரம் முடிந்துவிட்டது. சமீபத்திய டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு விமான சிப்பந்தி குழுவினருக்கு ஒரு தரையிறக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் சிப்பந்தி குழுவினர் ஓய்வுக்கு சென்றுவிட்டனர். பின்னர் சிகாகோவில் இருந்து சிப்பந்திகள் வாகனம் மூலம் மில்வாவ்கி விமானநிலையம் அழைத்து வரப்பட்டனர். இதற்காக பயணிகள் சுமார் 6 மணி நேரம் வரை விமானத்திலேயே காத்திருந்தனர். இதன் பின்னர் விமானம் சிகாகோ விமான நிலையம் வந்தடைந்தது

அமெரிக்காவின் விதிகளின் படி சர்வதேச விமானங்களில் பயணிகள் 4 மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்திருந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் ஒரு பயணிக்கு தலா 27 ஆயிரத்து 500 டாலரை ஏர் இந்தியா வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் 323 பயணிகளுக்கும் 88 லட்சம் அமெரிக்க டாலர்களை ஏர் இந்தியா அபராதமாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவுக்கு இது பெரும் இடியாக அமைந்துள்ளது.