சென்னை:

க்கள் நலனுக்கு உகந்தவர்களா என்பதைப் பார்த்து, அந்த கட்சியுடன்  கூட்டணி வைக்கப்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் மேகதாது அணை விவகாரரம், தேர்தல் கூட்டணி  குறித்தும்  சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே அதிமுக முடக்கியது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க செய்தார்கள் என்று தெரிவித்தார்.

மேகதாது திட்டம் தொடர்பாக எந்த ஒப்புதலும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துள்ள நிலையில், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அறிக்கை கொடுத்தது சட்ட விரோதம் என்று கூறியவர், மத்தியிலோ அண்டை மாநிலங்களிலோ எந்த அரசாக இருந்தாலும் எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு, யாரோடு யார் கூட்டணி என்பது உரிய தருணத்தில் தெரிவிப்போம் என்றும், மக்கள் நலனுக்கு உகந்தவர்களா என்பதைப் பார்த்து கூட்டணி வைக்கப்படும் ஆனால் யாருடன் கூட்டணி என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றவர், அதிமுகவிலும் கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

காலியாக உள்ள 18 தொகுதி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு,  இடைத்தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்றவர், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக முழுமையாக வெற்றி பெறும், எத்தனை சதிகள், சூழ்ச்சிகள் செய்தாலும் அதிமுக அரசை வீழ்த்த முடியாது தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.