சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவரை வரவேற்ற  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் விநாயகர் சிலையையும், நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர்.

விழாவில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அமித்ஷா காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்றார்.

மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் 3வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் என்றும் அவர் கூறினார். வேல் யாத்திரை உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிமுக, பாஜக இடையே முரண்பாடு இருந்து வந்தது. இப்படிப்பட்ட சூழலில், சட்டசபை தேர்தலில் கூட்டணி நிலைமை குறித்த கேள்விகள் இருந்து வந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக தேர்தலில் பாஜகவுடான கூட்டணி தொடரும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.