Random image

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்! வி.பி.துரைசாமியின் மூக்குடைத்த முருகன்…

சென்னை: தமிழகத்தில், இனிமேல் பாஜக – திமுக இடையேதான் போட்டி, பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று காலை தமிழக பாஜக துணைத்தலைவர்  வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், வி.பி.துரைசாமியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அதிமுகவின் முதுகில் ஏறிதான் பாரதிய ஜனதா கட்சி சவாரி செய்துகொண்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற பல தேர்தலிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே பாஜக இடம் பெற்றும், தேர்தல் சமயங்களில், தங்களுக்கு வாக்கு வங்கி இருப்பதாக கூறி, அதிமுக தலைமையிடம்  சண்டைபோட்டு,  அதிக இடங்களை பெற்றும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலையே இன்றுவரை நீடித்து வருகிறது.

இந்த நிலையில்தான் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் வி.பி.துரைசாமி,  தமிழகத்தில் இனிமேல் பாஜக தலைமையில்தான் கூட்டணி, பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி, என்று அதிமுகவை கழற்றி விடும் நோக்கில் கருத்து தெரிவித்திருந்தார். இது  அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தத பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜக மிகப்பெரும் கட்சியாக மாறி வருவதாக தெரிவித்தவர்,  அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என கூறினார்.

வி.பி.துரைசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு,  பாஜக தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக மாறி வருவதால், என்றார். அதனை வெளிப்படுத்தும் விதமாகவே வி.பி.துரைசாமி அவ்வாறு கூறினார் என்றும், திமுகவில் இருந்து மேலும் பலர் பாஜகவுக்கு வர இருப்பதாகவும் கூறியவர்,  தற்போதுள்ள அதிமுக – திமுக என்ற நிலை மாறி,  பாஜக – திமுக என்ற நிலை  தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் கூறினார்.

கனிமொழியின் விமான நிலைய இந்தி சர்ச்சை குறித்த கேள்விக்க,  திமுக எம்.பி கனிமொழி இந்திய அளவில் பிரபலமானவர், அனைவருக்கும் அறிமுகமானவர், அவரை டெல்லி விமான நிலையத்தில் எந்தவொரு காவல்துறை அதிகாரியும் அதுபோல விசாரித்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறியவர், அரசியல் செய்வதற்காக இதுபோன்ற கருத்துக்களை கனிமொழி பதிவிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தமிழகத்தில் இ.பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக  கூட்டணியிலேயே பாஜக தொடரும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளது, துணைத்தலைவர் வி.பி.துரைசாமியின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் அமைந்துள்ளது. மாற்றுக்கட்சயில் இருந்துவந்து, பதவி பெற்ற , கட்சியின் துணைத்தலைவரை முடக்கும் வகையில், எல்.முருகனின் நடவடிக்கை அமைந்துள்ளது.