மோடி – ஜின்பிங் சந்திப்பை அதிமுக, பாஜக அரசியலாக்க முயற்சி! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை:

ந்திய – சீனத் தலைவர்களின் சந்திப்பு உரிய பலனைத் தரும் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆனால், தமிழக பாஜகவும், அதிமுகவும் இதை அரசியலாக்க முயற்சி செய்கிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து,  தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“1947-ம் ஆண்டு இந்தியாவும், 1949-ம் ஆண்டு சீனாவும் விடுதலை பெற்ற பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகளால்தான் இருநாடுகளும் மீண்டும் பொருளாதாரத்தில் புத்துயிர் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தன. சீனாவை வளர்த் தெடுத்து வல்லரசாக உருவாக்கியதில் மா-சே-துங் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். அதுபோல், சீனாவைப் பொருளாதார வல்லரசாக உருவாக்கியதில் டெங்-ஜியோ-பிங்குக்கும் பெரும் பங்கு உண்டு.

தாராளமயமாக்கல் கொள்கையை சீனா ஏற்றுக்கொண்டு அந்நிய முதலீட்டை வரவேற்றது. அதன்மூலம் அந்த நாடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட ஆரம்பித்தது. ஆனால், இந்தியா 10 ஆண்டுகள் கழித்துதான் அந்தப் பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தது. இன்றைக்கு உலக அரங்கில் சீனாவும், இந்தியாவும் மக்கள்தொகையில் மட்டுமல்ல, பொருளாதாரத் துறையிலும் மிகப்பெரிய வல்லரசுகளாக வளர்ந்துள்ளன.

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை புரிவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். தமிழகத்திற்கு குறிப்பாக, மாமல்லபுரத்திற்கு வருகை புரிவது மிகவும் பொருத்தமானதாகும். புத்த மதத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சீனத் தூதர் யுவான் சுவாங் காஞ்சி புரத்தில் நீண்டகாலம் தங்கியதை இங்கு நினைவு கூர்கிறேன்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. 1960-களில் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் சீன பிரதமர் சூயன்லாய்-க்கும் உணர்ச்சிப்பூர்வமான நல்லுறவு இருந்து வந்தது. இந்த நல்லுறவை ஜவஹர்லால் நேரு போற்றி வளர்த்தார். இதற்காக சீன மக்களின் மாபெரும் தலைவர் மா-சே-துங் உரையாடியதையும் இங்கு நினைவுகூர்கிறேன். ஆனால், இந்தியாவுக்கும் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் நம்பிக்கை துரோகம் செய்கிற வகையில் 1962 ஆம் ஆண்டில் இந்தியா மீது சீனா படையெடுப்பு நடத்தியது. இந்த நிகழ்வில் பிரதமர் ஜவஹர்லால் நேரு எவ்வளவு மன வேதனை அடைந்தார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இன்றைக்கும் பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக சீனா செயல்பட்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், டோக்ளாம், இலங்கை ஆகியவற்றில் சீனாவின் அத்துமீறல்கள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. அண்டை நாடான இலங்கையில் சீனாவினுடைய ஆதிக்கம் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கிற வகையில் உருவாகி வருகிறது. சீனாவின் முதலீடுகள் இலங்கையில் அதிகரித்து வருகிறது.

அதுபோல், காஷ்மீர் பிரச்சினையில் சமீபத்தில் பாஜக அரசு எடுத்த நிலையை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என்றாலும், இதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுகிறது. சர்வதேச அளவில் இப்பிரச்சினையை முன்னெடுத்துச் செல்லவும், ஐநா சபையில் இப்பிரச்சினையை எழுப்பவும் சீனா ஆதரவு தெரிவித்திருக்கிறது.
அண்டை நாடான இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளை அங்கே கட்டியிருக்கிறது. தற்போது 300 மில்லியன் டாலர் முதலீட்டில் 40 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு சீனா முதலீடு செய்திருக்கிறது. இதுவரை தென் இலங்கையில் முதலீடு செய்த சீனா தற்போது வட இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறது. மேலும், அம்பன்தோட்டா துறைமுகத்திற்காக மிகுந்த அக்கறையோடு சீனா முதலீடு செய்திருக்கிறது. இதன்மூலம் வங்காள விரிகுடாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தி வருகிறது.

மேலும், ஏற்கெனவே அருணாச்சலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தமக்குச் சொந்தமானது என சீனா உரிமை எழுப்பி வருகிறது. அக்சை சின் பகுதியில் 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு இந்தியா உரிமை கொண்டாடி வருகிறது. இப்பிரச்சினைகள் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்திய – சீனத் தலைவர்களின் சந்திப்பு உரிய பலனைத் தரும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. நல்ல தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், நிலவி வருகிற சூழல் மிகுந்த கவலையைத் தருகிறது.

ஆனால், இந்திய – சீனத் தலைவர்களின் சந்திப்பை அரசியல் நிகழ்வாக மாற்றுவதற்கு பாஜகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாக அணுக வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் செயல்படுவதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

இதுகுறித்து மத்திய – மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்,”

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி