அதிமுகவை உடைத்தது குருமூர்த்திதான்! தங்கத்தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

சென்னை,

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவை ஆட்டிப்படைத்தது, உடைத்தது எல்லாம் குருமூர்த்திதான் என்று டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செ‘ல்வன் நேரடியாக குற்றம் சாட்டினார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோகமாக வெற்றிபெற்றார். அதையடுத்து, துக்ளக் ஆசிரியரான குருமூர்த்தி, ஈபிஎஸ்,ஓபிஎஸ் ஆகியோர் ஆண்மையற்றவர்கள் என்ற பொருள்படும் வகையில் டுவிட் செய்திருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. குருமூர்த்தியின் அநாகரிக டுவிட்டுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், குருமூர்த்தியின் செயல்குறித்து டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செல்வன் கூறியதாவது,

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவை தனது போக்கிற்கு  ஆடிட்டர்  குருமூர்த்தி  ஆட்டிப்படைத்த தாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை கையில் வைத்துக்கொண்டு அரசியல் விளையாட்டை நடத்தி வந்தாக கூறினார்.

மேலும், அவர் வாயிலாகவே  அதிமுகவை உடைத்தார் என்றும், அதைத்தொடர்ந்தே ஓபிஎஸ் தர்மயுத்தத்தை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டினார்.

அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டே ஒபிஎஸ் தர்மயுத்தம்  ஏற்பாடு செய்து, இரட்டை இலையை முடக்கினார் என்றும் கூறிய அவர்,  தேர்தல் ஆணையத்தில் எங்களை நிறுத்தி, எடப்பாடி பழனிசாமியை கையில் எடுத்து, இணைப்பை நடத்தி பின்னர்  இரட்டை இலையை வாங்கிக் கொடுத்தது என அனைத்தையும் முன்னின்று நடத்தியவர் குருமூர்த்தி தான் என்றார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம் குருமூர்த்திதான் என்று தங்கதமிழ் செல்வன் பகிரங்கமாக அம்பலப்படுத்தினார்.