அதிமுகவில் சலசலப்பு: அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சலசலப்பு எழுந்து வரும் நிலையில், மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக அதன் தலைமை நிர்வாகிகளின் கூட்டம் நேட்றறு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி வந்தபோது, நிரந்தர முதல்வர் எடப்படி வாழ்க என்ற கோஷமும், ஓபிஎஸ் வந்தபோது, அம்மாவின் ஆசி பெற்ற முதல்வர் ஓபிஎஸ் என்றும் அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் நேற்று மாலை  நடைபெற்ற  கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் தலைவர்கள் காரசாரமாக விவாதித்தனர். கட்சியில் முதல்வர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இணைப்பின்போது ஒப்புக்கொண்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் மீண்டும் கோரிக்கை எழுப்பியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. மேலும், வரும் 28 ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வருடன் சில அமைச்சர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.  நேற்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றுவருவதாக தெரிகிறது.