சென்னை: அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்,  முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் தெரிவித்து உள்ளனர்.

செங்கோட்டையன் – சீனிவாசன்

முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அ.தி.மு.க.வில் எந்தக் குழப்பமும் இல்லை. அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதுபோல,  முதல்வர் பழனிசாமியின் நல்லாட்சிக்கு சாட்சியாக எங்கும் நல்ல மழை பெய்து வருகிறது, அவர்தான் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர் செங்கோட்டையன் நாசூக்காக தெரிவித்துள்ளார்.

அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. பின்னர் 7ந்தேதி முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு  வெளியிடப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், அதிமுக மீண்டும் உடையும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்,  அதிமுகவில் முதல்வர் வேட் பாளர் யார் என்ற போட்டியெல்லாம் இல்லை. நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறோம். சின்னப் பிரச்சினைகள் இருக்கும், அதையெல்லாம் பார்த்துக் கொள்வோம். அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான்.  அடுத்த முதல்வர் பழனிசாமி தான். அக்டோபர் 7-ம் தேதி முறைப்படி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள். முதல்வர் நடத்திய கூட்டத் தில் துணை முதல்வர் பங்கேற்காதது, அவரது வேலை யின் காரணமாகவே.

இவ்வாறு அவர் கூறினார்.

அதுபோல, ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “முதல்வர் பழனிசாமியின்  நல்லாட்சியின் பயனாக நாடு முழுவதும்  நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள், மக்கள் மகிழும் அளவிற்கு மழை பெய்து வருகிறது.கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என பிரதமரே பாராட்டும் வகையில் முதல்வர் செயல்பாடு உள்ளது. ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று நாசூக்காக அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதிப்படத் தெரிவித்தார்.

மேலும், செயற்குழு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  அறைக்குள் பேசுவதை வெளியில் கூறுவது நாகரிகம் அல்ல என்று மறுத்து விட்டார்.

வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், எடப்பாடிக்கு ஆதரவாக  அமைச்சர்கள் கருத்து தெரிவித்து உள்ளது, கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.