சென்னை:

மமுகவை இதுவரை ஒரு  அமைப்பாக செயல்படுத்தி வந்த டிடிவி தினகரன், தற்போது அமமுகவை தனிக்கட்சியாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் அதிமுக இணையும்  என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ், டிடிவி, அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி உள்ளார்.

அதிமுகவை அமமுகவுடன் இணைப்போம் – டிடிவி தினகரன்

அமமுக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  சசிகலாவிடம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்துதான்,  தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றவர்,  சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம். கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாணப் பத்திரம் பெற்றுள்ளோம். அமமுக துணைத்தலைவராக அவைத்தலைவரான நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்காக அமமுகவில் தலைவர் பதவி எப்போதும் காலியாகவே இருக்கும்’ என்றார்.

அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது –  ஓபிஎஸ் 

டிடிவியின் பேட்டி குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திடம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், தினகரன் தலைமையிலான அமமுக.,வால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது, ஒருபோதும் கைப்பற்ற முடியாத” என்றவர்,  திருப்பரங்குன்றம் உள்பட நான்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்படுவர். நான்கு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். மதுரை மக்களவை தேர்தலில், திருவிழா காரணமாக சரியான வாக்குகள் பதிவாகவில்லை” என்றும் கூறினார்.