சென்னை: அதிமுக அரசு மீது ஊழல் புகார் பட்டியலை கவர்னரிடம் கொடுத்த திமுக தலைவர், பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, அதிமுக அரசு மீதான  ஊழல் Part-1 தான் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் Part 2 இருக்கிறது. அதை மீண்டும் ஆளுநரை சந்தித்துக் கொடுப்போம் என தெரிவித்தார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று காலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து 97 பக்க அளவிலான ஊழல் புகார் பட்டியல் கொண்ட மனுவை வழங்கினார். அதில்,  முதல்வர் மற்றும்  அமைச்சர்களின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு உள்ளது. புகார் மனுமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

பின்னர், ஆளுநர் மாளிகை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதாவுவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சியில் நான்கு வருடங்களில் எல்லா துறைகளிலும் ஊழல் விரிவடைந்து போயிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

அதிமுக அமைச்சர்களுடைய ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்களை கொடுத்து இருக்கிறோம். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை தி.மு.க கொடுத்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், மத்திய அரசு வழங்கி அரிசியை வெளி சந்தையில் விற்று அதில் ஒரு மாபெரும் ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்த ஊழல் என இவையெல்லாம் ஆதாரத்துடன் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ளோம்.

துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு மீறி அதிகமாக சொத்துகளை குவித்தது குறித்தும் எந்த நடவடிக்கையும் லஞ்ச ஒழிப்பு துறை எடுக்கவில்லை. தி.மு.கவின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

அதேபோல அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் கூடிய எஸ். பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், விஜயபாஸ்கர் ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்திருக்கிறோம். அதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்போது அந்த புகார்களை ஆதாரத்துடன் இன்றைக்கு ஆளுநரிடம் நேரில் சந்தித்து கொடுத்திருக்கிறோம்.

முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் குறித்து 2018ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆகவே லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். விசாரணை நடத்துவதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும். அதற்குரிய ஆவணங்களை எல்லாம் கவர்னரிடம் கொடுத்திருக்கிறோம்.

அதிமுக அமைச்சர்கள் மீது புகார்கள் ஆதாரத்துடன் தற்போது ஆளுநரிடம் தந்திருக்கிறோம். இது வெறும் part 1தான். அமைச்சர்கள் இன்னும் அதிகமாக ஊழல் செய்து இருக்கிறார்கள் என்பது குறித்து திமுக வழக்கறிஞர்கள் குழு ஆதாரத்துடன் திரட்டி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து Part?2  தயாராகி வருகிறது.  அதையும், மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆதரத்துடன் கொடுக்க உள்ளோம் என்றார்.

மேலும், நாளை முதல் கிராமசபை கூட்டத்தில் திமுக சார்பில் மக்களை சந்திக்க உள்ளோம். அப்போது, அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.